Eswaran Exclusive Interview Video: ‛கட்சியில் வாரிசு வருவது தவறல்ல... வாரிசு தான் கட்சியை வழிநடத்த முடியும் என்பது தவறு’ -ஈஸ்வரனின் ஈட்டி பதில்கள்!
MDMK Eswaran Exclusive Interview: அது இங்கு இருக்காது என்று தான் நினைத்தேன். ஆனால் கடைசியில் அது போட்டு உடைக்கப்பட்டுள்ளது. தலைவர் மீது தவறான அபிப்ராயம் வைத்துக் கொண்டு தொடர்ந்து செயல்பட முடியாது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவில் தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகினார். அது தொடர்பாக திரைமறை காயாக அவர் அறிக்கை விடுத்திருந்த நிலையில், நேருக்கு நேர் காரசாரமாக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு ABP Nadu இணையத்திற்கு அவர் அளித்த ப்ரத்தியேக பேட்டி இதோ...
திடீரென மதிமுகவில் விலக உண்மையில் என்ன காரணம்?
மதிமுகவில் 28 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சமீபமாக நடந்து வரும் நிகழ்வுகள் வேதனை அடைய செய்கிறது. எனக்கு தெரியாமல் கட்சியில் பல காரியங்கள் நடக்கிறது என பொதுச் செயலாளர் சொல்லும் போது, என்னுடைய வேதனையை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. இந்த நிகழ்வுகள் மனதை பாதித்தது. ஒரு பெரிய கருத்து வேறுபாடோடு ஒரு இயக்கத்தில் பயணிப்பது சரியாக இருக்காது என அங்கிருந்து விலக முடிவு செய்தேன். உள்ளத்திலும், உதட்டிலும் ஒரே மாதிரி வார்த்தையில் செயல்பட்டு வந்தேன். இனியும் அவ்வாறு செயல்பட வேண்டுமானால், விலகுவதை தவிர வேறு வழியில்லை.
துரை வையாபுரிக்கு கட்சி பொறுப்பு வழங்கியது தான் உங்களுக்கு பிரச்சனையா?
எடப்பாடி பழனிச்சாமி மகன் கூட கட்சிக்குள் வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சியில் வரலாம். தலைவர் மகனால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்றால் அது தான் தவறு. 28 வருசம் வைகோ தான், கட்சியை வழிநடத்தினார். கட்சியில் உள்ள லட்சணக்கான தொண்டர்களுக்கு திறமை இருந்தும், தன் மகன் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்பது வியப்பாக உள்ளது.
நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த கருத்தை கூறவில்லையா?
நான் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனக்கு விருப்பமில்லை என்று அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.
வாரிசு அரசியல் கொள்கையில் இருந்து வைகோ விலகிவிட்டாரா?
அவர் கூட அப்படி நினைக்கவில்லை. அந்த சூழலுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். வாரிசு அரசியலை அவர் விரும்பியிருக்க மாட்டார் என்று தெரியும். ஆனால் அவர் தள்ளப்பட்டுள்ளார் . அவர் அந்த கொள்கையில் உறுதியாக இருந்தார். அவரே என் கையை மீறி கட்சி சென்று விட்டது என்கிறார். அதுக்கு மேல் என்ன சொல்வது.
கட்சியை வழிநடத்த வேறு யார் இருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?
காலம் முடிவு செய்யும். அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போது யாரையும் அவர் அடையாளப்படுத்தவில்லை. காலம் முடிவு செய்யும் என நினைத்தார். இங்கும் அது மாதிரி தான். காலம் ஒருவரை முன்னாடி நிறுத்தும். இவர் தான் என்று யாரையும் அடையாளப்படுத்த வேண்டிய அவசியமும், தேவையும் இப்போது இல்லை.
கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பதால் விலகுகிறீர்களா?
அதெல்லாம் கிடையாது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்பது என்பது உரிமை. கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் அரசியலில் தானே தொடர்கிறோம்.
இனி என்ன செய்வதாக திட்டம்?
எனது போராட்டம் தொடரும். எனது ஆதரவாளர்களை இணைத்து எனது போராட்டத்தை தொடர்வேன். அதற்காக தனி இயக்கத்தை தொடங்க உள்ளேன்.
திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளீர்களா?
திமுகவில் இணையும் திட்டமில்லை. எந்த கணக்கும் போட்டும் நான் கட்சியில் இல்லை. வைகோவிற்காக அரசியலுக்கு வந்தேன். அந்த நேர்மை என்னை ஈர்த்தது.
வைகோ கட்டுப்பாட்டில் கட்சி இல்லையா?
அவ்வாறு நான் சொல்லவில்லை. அவர் தான் அவ்வாறு கூறியிருக்கிறார்.
இதோ முழு பேட்டி... வீடியோவாக...
வாரிசு அரசியல் தான் நீங்கள் வெளியேற காரணமா?
வாரிசு அரசியல் என மொட்டையாக சொல்ல வேண்டாம். வாரிசுகள் வரலாம், செயல்படலாம். வாரிசுகள் தான் இயக்கத்தை நடத்த முடியும் என்பது தான் தவறு. அது இங்கு இருக்காது என்று தான் நினைத்தேன். ஆனால் கடைசியில் அது போட்டு உடைக்கப்பட்டுள்ளது. தலைவர் மீது தவறான அபிப்ராயம் வைத்துக் கொண்டு தொடர்ந்து செயல்பட முடியாது.
உங்களைப் போல் மற்றவர்கள் எதிர்க்கவில்லையே... ஏற்றுக்கொண்டுள்ளார்களே?
மறுக்கவில்லை. விரும்பி தான் ஏற்றுள்ளனர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில் தான் அனைவரும் உள்ளனர். அந்த சூழல் தான் இயக்கத்தில் உள்ளது. ஒத்துப்போனால் மட்டுமே இங்கு இருக்க முடியும். என் மனம் அதை ஏற்க மறுக்கிறது. அதனால் வெளியேறுகிறேன்.
உங்கள் முடிவுக்குப் பின் கட்சியில் யாரும் பேசவில்லையா?
மாவட்ட செயலாளர் அழைத்து பேசினார். என் மீதான அன்பினால் பேசினார். என் முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டேன்.