மதிமுகவில் வைகோ மகன்... அம்பலம் செய்த நாளிதழ் விளம்பரம்! திமுக கவனத்தை பெற விரும்பும் துரை வைகோ!
எங்கோ இருக்கும் குருவிகுளம் ஒன்றியத்தில் வெற்றி பெற்றதற்கு சென்னையில் விளம்பரம் தர வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? வேறென்ன அரசியல் மட்டும் தான்!
அரசியலுக்கு வாரிசும் புதிதல்ல... தமிழகத்திற்கு வாரிசு அரசியலும் புதிதல்ல...! பிரதான கட்சிகளே வாரிசு அரசியல் செய்யும் போது, கூட்டணி சவாரியில் நிற்கும் கட்சிகளில் வாரிசு புகுவது ஒன்றும் பெரிதல்லவே. ஆமாம்,.. இப்போதைய அரசியல் வாரிசு விமர்சனத்தில் சிக்கியிருக்கும் கட்சி மதிமுக. ஒன்மேன் ஆர்மியாக வைகோ தூக்கி சுமந்த கட்சி, தற்போது அவரது மகன் துரை வைகோ வசம் செல்லும் காலம் நெருங்கி வருகிறது.
‛என் மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்று நான் அறிவுறுத்தினேன்... ஆனால் என் கவனத்திற்கு வராமல் சில விசயங்கள் கட்சியில் நடக்கிறது,’ என்று தனது மகனின் மதிமுகவே பிரவேசம் குறித்து சில நாட்களுக்கு முன் வைகோ அளித்த பேட்டி இது. அவர் சொல்வது உண்மை என்பது அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்களில் நிரூபணம் ஆகிறது. ஆமாம்... வயது மூப்பு காரணமாக வைகோ பலவீனமாகிவிட்டார். அந்த இடத்திற்கு இன்றில்லை என்றாலும், வேறொரு நாள் ஒருவர் தேவை. அந்த இடத்திற்கு வேறு நபர் எதற்கு நானே வருகிறேன் என வாண்டடாக வந்துவிட்டார் வைகோ மகன் துரை வைகோ.
திரைமறை காயாக காய் நகர்த்திக் கொண்டிருந்த துரை வைகோ, இன்று நேருக்கு நேராக பகிரங்கமாக தனது அரசியல் பிரவேசத்தை அம்பலத்தியிருக்கிறார். திமுக சார்பு நாளிதழ் ஒன்றில், அரை பக்கத்திற்கு வந்துள்ள விளம்பரம் தான் அதற்கு சாட்சி. ‛கிடைத்த வாய்ப்பை வெற்றியாக மாற்றுபவன் வீரன்! வாய்ப்பை உருவாக்கி , அதில் வெற்றியைக் குவிப்பவன் தலைவன்’ என தலைப்பிடப்பட்டு வந்துள்ள அந்த விளம்பரத்தில், குருவிகுளம் யூனியன் முழுவதையும் வென்று மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும், திராவிட இயக்கப் போர்வாள் மக்கள் தலைவர் வைகோவிற்கும் பரிசாகத் தருவோம் என்று 27.8.2021 அன்று இளையரசனேந்தலில் துரை வைகே பேசியதாக ‛அன்று’ என ஒரு பகுதியும், திமுக தலைமையிலான மறுமலர்ச்சி திமுக அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி குருவிளம் ஒன்றியத்தை வென்றது இன்று என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாயமில்லா மக்கள் பணி-சமரசமில்லா மக்கள் நலன் என்ற உன் தாரக மந்திரத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர் படை. துரை வைகோ பாசறை- குருவிகுளம் ஒன்றியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருபுறம் முதல்வர் ஸ்டாலினை வைகோ ஆணைத்தபடி நிற்கும் போட்டோ, மற்றொரு வரும் அவர்கள் இருவரையும் வணங்குவதைப் போன்று துரை வைகோ நி்ற்கும் போட்டோ என கிட்டத்தட்ட ஒரு பிரகடனமாகவே அந்த விளம்பரம் உள்ளது.
தனது தலைமையில் ஒரு ஊராட்சி ஒன்றியம் கைப்பற்றப்பட்டது என்பதை கூறுவது தான் இதன் மூலம் துரை வைகோ முன் வைக்கும் கோரிக்கை. துரை வைகோவிற்கு பாசறை வைக்கும் அளவிற்கு நிலை வந்துவிட்டது. இனி அவர்கள் தான் மதிமுகவின் புதிய நிர்வாகியாக தேர்வாக வாய்ப்பு என்பது பிரகாசமாக தெரிகிறது. வெறுமனே மதிமுகவின் நிர்வாகியாக மட்டுமல்லாமல், கூட்டணி தலைமையான திமுகவின் கவனத்தை பெறவும் தான் இந்த விளம்பரம் தரப்பட்டுள்ளது. அதிலுள்ள வாசகங்களே அதற்கு சாட்சி. அதுமட்டுமின்றி... எங்கோ இருக்கும் குருவிகுளம் ஒன்றியத்தில் வெற்றி பெற்றதற்கு சென்னையில் விளம்பரம் தர வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? வேறென்ன அரசியல் மட்டும் தான்!