மடிக்கணினி வழங்கும் திட்டம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,427 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி...!
மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 4,427 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது.

மயிலாடுதுறை: தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டமான "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது. தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில், 823 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் வழங்கினார்.
"உலகம் உங்கள் கையில்" – டிஜிட்டல் புரட்சி
தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் மூலம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் "உலகம் உங்கள் கையில்" என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதற்கட்டமாக 4,427 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி
விழாவில் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பேசுகையில், "மாணவச் செல்வங்கள் உலக அறிவைப் பெற்று, வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் இந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தை முன்னெடுத்துள்ளார். மடிக்கணினி என்பது வெறும் கருவி அல்ல, அது உங்கள் முன்னேற்றத்திற்கான திறவுகோல்," என்று குறிப்பிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக மொத்தம் 4,427 இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
*தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி - 676
* குத்தாலம் அரசு கலைக் கல்லூரி - 107
* சீர்காழி புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 368
* மணல்மேடு அரசு கலைக் கல்லூரி - 352
* புத்தூர் சீனிவாசா சுப்பையா பல்தொழில்நுட்பக் கல்லூரி - 356
* செம்பனார்கோவில் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி - 40
* தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி (அரசு உதவிபெறும்) - 539
* பொறையார் டி.பி.எம்.எல் கல்லூரி (அரசு உதவிபெறும்) - 349
* மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி (அரசு உதவிபெறும்) - 1254
* பூம்புகார் கல்லூரி (அரசு உதவிபெறும்) - 386
மொத்தம் - 4,427
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாடு
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய சூழலில் இருந்து வரும் மாணவிகள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள், மென்பொருள் பயிற்சி மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு மடிக்கணினி அத்தியாவசியத் தேவையாக உள்ளது. இதனை உணர்ந்தே தமிழ்நாடு அரசு, உயர்கல்வித் துறையை வலுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"தொழில்நுட்ப யுகத்தில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதே அரசின் நோக்கம். 'உலகம் உங்கள் கையில்' என்பது வெறும் வாசகம் அல்ல, அது மாணவர்களின் எதிர்காலத்திற்கான உறுதிமொழி," என்று விழாவில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுண சங்கரி, தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரி முதல்வர் ரேவதி, மற்றும் நகர்மன்ற உறுப்பினர் கீதா செந்தில் முருகன் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.






















