இளைஞர்கள் எப்படி விஜயை ஏற்றுக்கொள்வார்கள்..? காரணங்களை அடுக்கிய கே.பாலகிருஷ்ணன்
மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ஐ.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் விஜய் குறித்து கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் திரைக் கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் கூட்டம் கூடுவது இயல்பானதுதான் என்றும், ஆனால் த.வெ.க. தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்பது தேர்தலுக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் சி.பி.ஐ.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், அவர் எந்த ஆக்கபூர்வமான கொள்கைகளையும் முன்வைக்கவில்லை என்றும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காதல் விவகாரத்தில் நடைபெற்ற கொலை
மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலத்தில் காதல் விவகாரத்தில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிந்தன் மற்றும் பல நிர்வாகிகள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன் கூறியதாவது:

வெட்கித் தலைகுனியக்கூடிய ஒரு சம்பவம்
"காதல் விவகாரத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அவர்களுக்குத் துணையாகவும், வழக்கு நடத்துவதற்குப் பக்கபலமாகவும் இருக்கும் என்று உறுதியளித்துள்ளோம். இது மிகவும் வெட்கித் தலைகுனியக்கூடிய ஒரு சம்பவம். நீண்ட காலமாகச் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் டெல்டா பகுதியில், காதல் திருமணத்திற்கு எதிராகப் பெண்ணின் உடன் பிறந்தவர்களே கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "கொலைச் சம்பவத்திற்கு முன்னதாக அப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

உடனே சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்
இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க, ஆணவப் படுகொலைக்கு எதிரான தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொலைக்கு நேரடியாகத் தொடர்புடையவர்கள் மட்டுமல்ல, அதற்குத் தூண்டுதலாகவும், பின்புலமாகவும் இருந்த பல்வேறு சாதிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தச் சட்டம் தேவை என நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வளவு கோரிக்கைகளுக்குப் பிறகும் தமிழக அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. உடனடியாக தமிழக அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்."

முழுமையான விசாரணை
"மயிலாடுதுறையில் பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், இதுபோன்ற காதல் திருமணங்களைத் தடுப்பவர்களுக்கு எதிராக எல்லா ஜனநாயக அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோர், தங்கள் மகளின் திருமணத்திற்கு எதிராக இருந்தது என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்களுக்குப் பின்னால் இருந்து வேறு யாரோ இதை ஊக்குவித்திருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் சந்தேகம். இதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும்."

த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பாலகிருஷ்ணன், "இந்தியாவில் திரைக் கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் கூட்டம் கூடுவது இயல்புதான். அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. ஆனால், அந்தக் கூட்டம் வாக்குகளாக மாறுமா இல்லையா என்பது தேர்தலுக்குப் பின்னரே தெரியும். அவர் எந்தவொரு ஆக்கபூர்வமான கொள்கையையும் சொல்லவில்லை. உலகில் காசாவில் பெரிய அளவில் இனப்படுகொலை நடைபெறுகிறது. மத்திய அரசின் பல்வேறு மோசமான நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் இவை பற்றியெல்லாம் அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. சினிமாவில் வசனம் பேசுவதுபோலவே பேசுகிறார். அரசியல் விழிப்புணர்வுடன் உள்ள இளைஞர்கள் எப்படி இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை" என்றார்.






















