விஜயின் கிளைமாக்ஸ் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் - எம்.பி.சுதா..!
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வாக்குத்திருட்டை மறைக்கும் நாடகம் என காங்கிரஸ் எம்.பி. சுதா குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் வாக்குரிமையையும் பாதுகாக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் "வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம்" என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த நிகழ்வை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, துவங்கிவைத்தார்.
பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து
மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தனது முதல் கையெழுத்தை இட்டு, இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, எம்.பி. சுதா மற்றும் எம்.எல்.ஏ. ராஜகுமார் ஆகியோர் கிட்டாப்பா அங்காடி, பேருந்து நிலையம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள், பூக்கடைக்காரர்கள், வியாபாரிகள், மருந்துக்கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று கையெழுத்து பெற்றனர்.

இது வெறும் அரசியல் போராட்டம் அல்ல
இந்த இயக்கத்தின் நோக்கம் குறித்துப் பேசிய எம்.பி.சுதா, "மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் கையெழுத்துகளைப் பெறுவதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மக்கள் தானாகவே முன்வந்து ஆர்வத்துடன் கையெழுத்திடுவது, தேசத்தின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கிய சுதா, "பீகாரில் 64 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட போராட்டத்திற்குப் பிறகே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக அவர்களின் வாக்குரிமை மீண்டும் கிடைத்தது. இது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையையும் ஜனநாயகத்தையும் காப்பதற்கான போராட்டம்" என்று குறிப்பிட்டார்.

பயந்துபோன மத்திய அரசு
"இந்த தேசத்தைப் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரித்து, வாக்குகளைத் திருடும் சக்திகளுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். நாங்கள் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஆனால் தோல்வியுற்ற மோடி பிரதமராக இருப்பது வெட்கக்கேடானது. ராகுல் காந்தி எழுப்பிய எந்தக் கேள்விக்கும் தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. ராகுல் காந்தியின் போராட்டத்தைப் பார்த்துப் பயந்துபோன மத்திய அரசு, அவரை தேசத்திற்கு எதிராகப் பேசியதாகக் கூறி சம்மன் அனுப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஜி.எஸ்.டி வரி குறைப்பு நாடகம்
ஜி.எஸ்.டி. வரி குறித்துப் பேசியபோது, "ஜி.எஸ்.டி. மூலமாக ஒட்டுமொத்தமாக மக்களின் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்த மத்திய அரசு, இன்று வரியைக் குறைப்பதாக நாடகமாடுகிறது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை எப்போது திருப்பித் தருவீர்கள்? இந்திய ரிசர்வ் வங்கியில் காணாமல் போன 16 லட்சம் கோடி ரூபாய் எங்கே? 20 ஆயிரம் கோடி செல் நிறுவனத்தில் முதலீடு செய்தது குறித்த கேள்விக்கு ஏன் பதில் இல்லை? மக்களின் நலனை பாதிக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதிக்கக்கூடாது என்று அன்று குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி. ஆனால், இன்று வாக்குத்திருட்டை மறைப்பதற்காக ஜி.எஸ்.டியைக் குறைப்பதாக நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது. "நமது வரிப் பணத்தை மட்டுமல்ல, நமது வாக்குகளையும் திருடிவிட்டு, இன்று ஜி.எஸ்.டி.யைக் குறைக்கிறோம் என்று கூறும் மத்திய அரசு, மக்களிடமிருந்து பெற்ற ஜி.எஸ்.டி. வரியை முதலில் திருப்பித் தர வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியலுக்கு புது வரவு விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் குறித்துப் பேசிய சுதா, "அரசியலுக்கு இப்போதுதான் வந்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், இன்னும் வாக்குத்திருட்டு குறித்துப் பேசவில்லை. அது அவரது புரிதலின்மை. இந்த விவகாரம் குறித்து அவர் ஏன் பேசவில்லை என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். வாக்குத்திருட்டில் நமது உரிமை மீறப்படக்கூடாது என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருப்பதுபோல, அவருக்கும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சினிமா படத்தில் கிளைமாக்ஸ் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அவருடைய கிளைமாக்ஸ் என்ன என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்" என்று விமர்சித்தார்.
அழகிரியின் தனிப்பட்ட கருத்து
கூட்டணி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "யார் எந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும், தேர்தலை எப்படி எதிர்கொள்வது, ஆட்சியில் பங்கு கேட்பதா இல்லையா என்பதையெல்லாம் தலைவர் ராகுல் காந்திதான் முடிவு செய்வார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அழகிரியின் தனிப்பட்ட கருத்து" என்று பதிலளித்தார்.





















