முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் - அஸ்வத்தாமன் ஆவேசம்..!
விசிகவினர் குடிபோதையில் பொதுமக்களிடம் பிரச்னை செய்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தமுடியாமல் மதுஒழிப்பு மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது என பாஜக மாநில செயலாளர் விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடிபோதையில் பொதுமக்களிடம் பிரச்னை செய்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தமுடியாமல் மதுஒழிப்பு மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அஸ்வத்தாமன் கூறுகையில்;
பாஜக மாநில செயலாளர் செய்தியாளர் சந்திப்பு
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை பேரியக்கம் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்த அளவிற்கு வீரியமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்திருக்கிறேன். கடந்த 23-ம் தேதி காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் குடும்பத்தோடு ஆந்திராவிற்கு குழந்தையின் சிகிச்சைக்காக சென்று விட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி வழியாக காரைக்கால் நோக்கி சென்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்பகுதி ஒன்றிய செயலாளர் முல்லைமாறன் தலைமையில் குண்டர்கள் உச்சப்பச்ச குடிபோதையில் விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி தரகுறைவாக பேசி, பாரதிய ஜனதா கட்சியின் கொடியை கிழித்து பெரிய பிரச்சனை செய்துள்ளனர்.
திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா?
இதுதொடர்பாக கடந்த 25-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மோசமான செயலை செய்த சிசிடிவி காட்சியை கொடுத்த வணிகரையும் காவல் துறையினர் மிரட்டியுள்ளனர். சமூக விரோத செயல்களை செய்கின்றவர்களுக்கு தமிழக காவல்துறை ஆதரவாக இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய வேண்டுமென்று திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா?
ஊருக்கு உபதேசம் செய்யும் திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை முதலில் நடைமுறைப்படுத்தி, முல்லைமாறனை கட்சி பதவியில் இருந்து நீக்கிவிட்டு உங்கள் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள். விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் குடிபோதையில் பொதுமக்களிடம் பிரச்னை செய்கின்றனர். அதனைகட்டுப்படுத்தமுடியாமல் மதுஒழிப்பு மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காவல்துறை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.
திராவிட மாடல் பேய் ஆச்சி தமிழகத்தில் நடைபெறுகிறது
கருணாநிதி காலத்தில் ஸ்டாலினை கொண்டுவந்தார்கள். அவர் கட்சியில் பல பதவிகள் வகித்து கருணாநிதியுடன் அரசியல் பயணத்தில் இருந்துள்ளார். உதயநிதி ஒரு நடிகர். திரைத்துறையில் பெரிய சாதனை படைத்தவர் என்று சொல்ல முடியாது. வாரிசு அரசியல் திமுகவில் இருக்கும். அதனை திமுகவினர் ஒத்துகொள்கின்றனர். திராவிட மாடல் பேய் ஆச்சி நடந்துகொண்டிருக்கிறது. எந்த நாற்காலியில் யார் இருந்தால் என்ன. வாரிசு அரசியல் மக்களாட்சி தத்துவதற்கு எதிரானது. விஜய் வெளியில் வந்து மாநாடை நடத்தி கொள்கையை சொல்லட்டும். தமிழக அரசியல் வரலாற்றில் கொள்கையை முதலில் சொல்வார்கள். எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோர் கட்சியை தொடங்கியதும் கொள்கையை அறிவித்தனர். ஆனால் விஜய் கொள்கையை எதுவும் சொல்லவில்லை.
தமிழகத்தில் ஆறுகளில் புதர்மண்டி கிடப்பதால் கடைமடை பகுதிக்கு போதுமான அளவு தண்ணீர்வரவில்லை. தமிழகத்திற்கு தண்ணீருக்காக அண்டை மாநிலங்களில் சண்டைபோட்டு வாங்குகிறோம். தமிழகத்தில் போதுமான தடுப்பணைகள் இல்லை. தடுப்பணை இருந்தால் நிலத்தடிநீர் மட்டும் நன்றாக இருக்கும். திராவிடமாடல் பேய் ஆச்சி இதுபோன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும். பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் மும்மரமாக நடந்துகொண்டிருப்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் பதவி அறிவிப்பதில் காலதாதம் ஏற்பட்டு வருகிறது. கட்சி தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட துணைத்தலைவர் மோடி.கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.