ABP Nadu Exclusive: : ’நமது அம்மா அதிமுக பேப்பரே இல்லை’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் ஆவேச பேட்டி..!
’ஜெயலலிதா யாரை ஆதரித்தார், அவருடைய உள் உணர்வு என்ன சொல்லும் என்பதை அருகில் இருந்து பார்த்தவன் நான். அதன்படி, எது தர்மமோ, எது நியாயமோ அதன் பக்கம், அவர்கள் பக்கம் நிற்பேன்’
![ABP Nadu Exclusive: : ’நமது அம்மா அதிமுக பேப்பரே இல்லை’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் ஆவேச பேட்டி..! Maruthu Alaguraj Interview who Resigns namadhu amma editor post namadhu amma newspaper not belongs to AIADMK - EXCLUSIVE ABP Nadu Exclusive: : ’நமது அம்மா அதிமுக பேப்பரே இல்லை’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் ஆவேச பேட்டி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/29/f10877e58b74d8d173983495c91ba37f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகரமாகி, இரட்டையர்கள், இரட்டை குழல் துப்பாக்கி போன்றவர்கள், தேரின் இரண்டு சக்கரங்களை போல அதிமுகவை அழைத்து செல்பவர்கள் என புகழப்பட்ட ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தற்போது தனித் தனியாக பிரிந்து தலைமை யுத்தம் செய்துக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தடாலடியாக அறிவித்திருக்கிறார்.
![ஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/29/db0e60ca10f068b0e24a7e8bc28241a8_original.jpg)
இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள மருது அழகுராஜ் "நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
"நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். pic.twitter.com/Moy7mCVSg0
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) June 29, 2022
இது குறித்து அவரை தொடர்புகொண்டு நாம் பேசினோம்.
கேள்வி : நமது அம்மா ஆசிரியர் பொறுப்பில் இருந்து திடீரென விலக என்ன காரணம் ?
மருது அழகுராஜ் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் என்ற இரண்டு தலைவர்களின் தலைமையை ஏற்றுதான் நமது அம்மா ஆசிரியராக நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி ‘நமது எம்.ஜி.ஆர்’ ஆசிரியராக 11 ஆண்டுகள் பணியாற்றினேன். அவரது மறைவுக்கு பிறகு பத்திரிகை பணியில் இருந்து விடைபெற்றுவிடலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில், ‘நமது அம்மா’ என்ற பத்திரிகையை தொடங்கி, என்னை ஆசிரியராக இருக்க கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களின் இரட்டை தலைமையை ஏற்றுக்கொண்டுதான் ஆசிரியர் பொறுப்பில் தொடர்ந்தேன். ஆனால், இன்று அதிமுக மீண்டும் ஒரு பிளவை நோக்கி செல்வதை நான் உணருகிறேன், அதனால் இந்த ஆசிரியர் பொறுப்பில் இருந்து நான் விலகுவதாக முடிவெடுத்து அறிவித்துள்ளேன்.
கேள்வி : உங்க டிவிட்டர் பதிவில் ‘சுயநலத்தால் நம்பிக்கை தகர்ந்துவிட்டது’ என்று குறிப்பிட்டு இருக்கீங்களே, யாருடைய சுயநலத்தால் உங்கள் நம்பிக்கை தகர்ந்துவிட்டது ?
மருது அழகுராஜ் : இப்போது ஏற்பட்டிருக்கும் பிளவுக்கு யார் காரணமோ, எது காரணமோ அதுதான் சுய நலம் என்று சொல்கிறேன். ஏனென்றால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் ஒற்றை வாக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது. ஆனால்,’கல்யாணத்தை செய்துவிட்டு அடுத்த வாரமே டைவர்ஸ் செய்வது மாதிரி’ பிரச்னை ஏற்பட்டு பிரிவை நோக்கி செல்கிறார்கள். அதனால், இந்த பொறுப்பில் நீடிக்க முடியாது என்று நினைத்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
கேள்வி : சுயநலம் என்று சொல்கின்றீர்களே அது யாரை ? எடப்பாடி பழனிசாமியையா ? இல்லை ஒ.பன்னீர்செல்வத்தையா ?
மருது அழகுராஜ் : நான் அதைதான் திருப்பி திருப்பி சொல்கிறேன். இப்போதைய பிளவுக்கு யார் காரணமோ ? அதிமுக பிளவுபடவேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவரைதான் குறிப்பிடுகிறேன்.
கேள்வி : ஓபிஎஸ் – ஈபிஎஸ் இப்போது இரண்டாக பிரிந்துவிட்ட நிலையில், உங்களுடைய ஆதரவு என்பது யாருக்கு இருக்கும் ?
மருது அழகுராஜ் : அதிமுகவிற்காக என் உயிரையே ஒப்படைத்து, இரவும் பகலுமாக எழுதியிருக்கிறேன். என்னுடைய எழுத்து, பேச்சு என அத்தனையும் அதிமுகவிற்கானதுதான். அதற்காக என்னை ஆராதிக்கக் கூடிய, என்னை நேசிக்க கூடிய, என்னை ஊக்கப்படுத்தக் கூடிய நண்பர்களும், கட்சி நிர்வாகிகளும் நிறைய பேர் இருக்காங்க. அவர்களிடம் கலந்துபேசி என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை அறிவிப்பேன்.
எது நியாயமோ, எது தர்மமோ அதன் பக்கம் நிற்பேன். புரட்சித் தலைவி அம்மா யாரை விரும்புவார்கள், அவருடைய உள்ளம் என்ன சொல்லும் என்பதையெல்லாம் நான் அருகில் இருந்து பார்த்தவன். அதன்படி நான் முடிவு எடுப்பேன்.
கேள்வி : நமது அம்மா நாளேடு நிறுவனர்களில் ஓபிஎஸ் பெயரை நீக்கியிருக்கிறார்கள். அது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதா ? உங்களிடம் கேட்டுதான் முடிவு செய்தார்களா ?
மருது அழகுராஜ் : கடந்த சில மாதங்களாகவே ஆசிரியர் என்ற அடிப்படையில் கூட பேப்பரில் வரக்கூடிய விஷயங்கள் குறித்து எனக்கு தெரியப்படுத்தப்படுவது இல்லை. நடைமுறைகளையெல்லாம் மாற்றினார்கள். ஆனால், விலவிவிடக்கூடாது என்று என்னால் முடிந்த அளவுக்கு சகித்து போனேன். ஆனால், இப்போது அது முடியாமல்தான் இந்த விலகல் முடிவை எடுத்து அறிவித்திருக்கிறேன்.
நமது அம்மாவிற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை என பேர் வைத்திருந்தோமே தவிர, அது அப்படி செயல்படவில்லை. என்னை பொறுத்தவரை நமது அம்மா நாளேடு என்பது ஒரு தத்துப்பிள்ளைதான். சும்மா சொல்லிக்கிட்டோமே தவிர, அது அதிமுகவின் பத்திரிகையாக இல்லை என்பதுதான் எனது கருத்து.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)