`ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்றால் என்ன? அப்படி ஏதும் இல்லை!’ - மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இன்னும் ஏன் செயல்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த டிசம்பர் 1 அன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இன்னும் ஏன் செயல்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரைச் சந்தித்த பின் பேசிய மம்தா பானர்ஜி, `இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பதே இல்லை’ என்று கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி கூறியுள்ள இந்த செய்தி, நேரடியாக காங்கிரஸ் கட்சியைத் தாக்குவதாக அமைந்திருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதவி வகிக்கிறார். மேலும் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியிருப்பது இரு கட்சிகளுக்கு இடையிலான மோதல் போக்கையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
கடந்த இரு மக்களவை தேர்தல்களிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீதான நம்பிக்கை தகர்ந்து வருவதாக ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை வென்ற பிறகு, மம்தா பானர்ஜி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளைச் சந்தித்து, மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர். கடந்த நவம்பர் 30 அன்று, சிவ சேனா தலைவர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, இன்று சரத் பவாரைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில் இருவரும் பாஜகவை எதிர்ப்பதற்கான பலமான எதிர்க்கட்சிக் கூட்டணியையும், கூட்டுத் தலைமையையும் உருவாக்குவதற்கான வழிமுறைகள் பற்றி பேசியுள்ளனர்.
`நாம் பலமான மாற்று சக்தியை மக்களுக்கு அளிக்க வேண்டும். நம்முடைய எண்ணம் இன்று பற்றியது அல்ல; இது தேர்தலுக்கானது. இது உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் மம்தா பானர்ஜி நம்மைச் சந்திக்க வந்துள்ளார். இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருந்தது’ என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், `சஞ்சய் ரௌத், ஆதித்யா தாக்கரே ஆகியோரும் மம்தா பானர்ஜியைச் சந்தித்துள்ளனர். இன்று நானும், எனது கட்சியினரும் அவருடன் நீண்ட உரையாடலில் ஈடுபட்டோம். அவரது நோக்கம் இன்றைய சூழலில், தேசிய அளவில் ஒரே எண்ணம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து, கூட்டுத் தலைமையை உருவாக்க வேண்டும் என்பது’ என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி இந்த மாற்று அணியில் இடம்பெறுமா என்று சரத் பவாரிடம் கேட்கப்பட்ட போது, `பாஜகவை எதிர்க்கும் அனைவரும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். யாரையும் தனித்துவிடும் நோக்கம் இல்லை’ என்று அவர் கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி ஏற்கனவே எதிர்க்கட்சிக் கூட்டணிக்குக் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க முடியாது என்பதைப் பல முறை சூசகமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் `இந்திய அரசியலின் யதார்த்தம் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது வெறும் கனவே’ என்று கூறியுள்ளார்.