வைகோ vs பன்னீர்செல்வம்: 2011 தேர்தலில் நடந்தது என்ன? மல்லை சத்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்து எதிராக மல்லை சத்யா விளக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இப்போது அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு வியூகம் அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
வைகோவின் கருத்து
இந்தநிலையில் சமீபத்தில் பேசிய மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.., கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் செய்த தவறுக்கான பலனை தற்போது அனுபவித்து வருவதாக தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை மதிமுக புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக அது இன்று வரை பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சமீபத்தில் மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்தியா இதுகுறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மலை சத்யா விளக்கம்
இதுகுறித்து மல்லை சத்யா தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2011 தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். அதிமுக கூட்டணியில் அப்போது தேமுதிக வரவிருந்த நிலையில் 7 தொகுதிகள் தான் தர முடியும் என முதல் நாளில் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் தெரிவித்தனர். மறுநாள் இருவரும் வைகோவை சந்தித்தபோது, எண்ணிக்கையை மாற்றி சொல்லி விட்டோம், 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்தனர்.
வைகோவை சந்திக்க முயற்சித்த விஜயகாந்த்
அப்பொழுது இருவருடன் பேசிய வைகோ, நீங்கள் என்ன செய்ய முடியும். கட்சித் தலைமை சொல்வதைத்தானே சொல்கிறீர்கள். உங்கள் மீது எனக்கு வருத்தம் இல்லை "என வைகோ கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த சமயத்தில் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் தலைமையில், சில கட்சி தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்து, மதிமுகவும் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும். அதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என கூறினார்கள்.
அப்போது வைகோவிடம் பேச விஜயகாந்த் முயற்சி செய்தபோது முடியவில்லை. அந்த சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைக்கோ, "திருப்பதி செல்லும் வழியில், மரத்தடியில் தயிர் சாதம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்" என, வைகோ பதில் அளித்தார். விஜய்காந்த் தங்களை சந்திக்க விரும்புகிறார் என, வைகோவிடம் நான் கூறினேன். அப்போது வைகோ நேற்று கட்சி துவக்கிய நடிகரிடம் நான் பேச வேண்டுமா ? நாம் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம் என, என்னிடம் தெரிவித்தார்.
கோபமடைந்த வைகோ
பின் மதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் அதிகாலை வரை நடந்தது. இரவு முழுதும் காத்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் 12 தொகுதிகள் தர ஜெயலலிதா சம்மதித்து விட்டார் என கூறினார்கள்.ஆனால், அதை ஏற்க வைகோ மறுத்துவிட்டார். அப்போது பன்னீர்செல்வம் என்னிடம் "சத்யா உங்கள் மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் இருங்கள். காலையில் ஜெயலலிதாவிடம் பேசி விட்டு, நல்ல முடிவை சொல்கிறோம்" என பன்னீர்செல்வம் தெரிவித்தார்
இதனால் கோபமடைந்த வைகோ, மிஸ்டர் பன்னீர்செல்வம், நான் தான் கட்சியின் பொதுச்செயலர், உங்கள் தலைமை சொன்னதை என்னிடம் சொல்லி விட்டீர்கள். நீங்கள் போகலாம் எனக்கூறி, என் மொபைல்போனை வாங்கி, பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் முன்னிலையில் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
முடிவெடுத்தது ஏன் ?
மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜெயலலிதாவுக்கு வைகோ அனுப்பி வைத்தார். அந்த தீர்மானத்தில், அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்திய பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோருடன், டாக்டர் வெங்கடேஷ் பெயரையும் இணைத்து வைகோ எழுதியது, ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை அந்த செயல் ஜெயலலிதாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதற்கு பின், சூரியன் உதிக்கும், இலை கருகும் என, நாஞ்சில் சம்பத்தை விட்டு பேச வைத்து தேர்தலை புறக்கணிக்கும் முடிவை அறிவிக்க வைத்தார் வைகோ இதுதான் நடந்தது என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.






















