Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்.! இது தான் லாஸ்ட் சான்ஸ்- தேதி குறித்த ஜாக்டோ ஜியோ
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை உடனே செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கான தேதி அறிவித்துள்ளனர்.

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்
அரசு ஊழியர்கள் தான் குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் அரசின் திட்டங்களை கொண்டு செல்லும் பாலாமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையிலி பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டம் தான் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்திருந்தது. இந்த குழுவானது இன்னும் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்திற்கு தேதி அறிவித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கூட்ட அரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு. பாஸ்கரன், சே. பிரபாகரன், இலா. தியோடர் ராபின்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசு தமிழ்நாட்டில் ஆட்சிக்காலம் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. ஜாக்டோ-ஜியோ சார்பில் வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகளில் ஈட்டிய விடுப்பை அரசுக்கு ஒப்படைத்து காசாக்கப்படும் கோரிக்கையை மட்டும் தொடர்ச்சியான இயக்க நடவடிக்கைக்கு பின்னரே அரசு நிறைவேற்றி இருப்பதை மேற்கண்ட வரிகளோடு பொருத்தி பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோ அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான உரிமைகளை திரும்பத் தர முடியாது என்பதை நேரடியாகவே தெரிவித்து அரசு ஊழியர், ஆசிரியர்களை சந்திக்க மறுத்தார். ஆனால் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ ஜாக்டோ-ஜியோவின் 10 கோரிக்கைகளை வலியுறுத்தி எப்பொழுதெல்லாம் போராடுகின்றோமோ அப்போதெல்லாம் நம்மை நேரில் அழைத்துப்பேசியும், அமைச்சர்களை வைத்து நம்பிக்கைகளை விதைத்தும் உரிமைகளை தரமுடியாது என்று சொல்வதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று நம் பொறுமையை சோதித்து வந்தார்.
அரசாங்கம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரானவையாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் நம்முடைய உரிமைக்காக இனிமேலும் களம் காணாமல் இருந்தால் நம்முடைய உரிமைகளை நாம் இழந்து அடிமைகளாக நம்மை மாற்றிவிடும் நிலைமைகளைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜீன் மாதம் 18 ஆம் தேதி நாம் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெற செய்து இருப்பது அடுத்த கட்ட இயக்கங்களை திட்டமிடுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்
அதனடிப்படையில் தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள் ஜாக்டோ-ஜியோவின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி வட்டார அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது, டிசம்பர் 13 மாவட்ட தலைநகரில் உரிமை மீட்பு உணணாவிரதம், 27.12.2025 மாவட்ட தலைநகரில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது.





















