Su Venkatesan | மாணவ சமுதாயம் என்ன ஆடை அணியவேண்டும் என்பதை உத்தரவிட இவர்கள் யார்? சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசம்
மாணவ சமுதாயம் என்ன ஆடை அணியவேண்டும் என்பதை உத்தரவிட இவர்கள் யார்? என்று மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆவேசமாக பேசினார்.
கர்நாடகாவில் கல்லூரிக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல மறுப்பு தெரிவித்ததும், அதனால் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை சூழ்ந்துகொண்டு மாணவர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என்று முழங்கியதும், அந்த மாணவி பதிலுக்கு அல்லாஹ் அக்பர் என்று முழங்கியதும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று மக்களவையில் மதுரையின் எம்.பி.யும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, "ஒன்றிய இணையமைச்சர் அவரே ஒரு புகார் வாங்கி அந்த தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், இன்றைய தினத்தில் கர்நாடகாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஹிஜாப் அணிவதை வைத்து நடைபெறும் வெறுப்பு அரசியல் மாணவ சமுதாயத்தையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது.
தன் வயதை ஒத்த மாணவர்களுடன் கலந்துரையாடி, சமூகமயமாக வேண்டிய மாணவ சமுதாயத்தின் முன்னுரிமையை குலைக்கிறது. தலையிலே கிரீடம் அணிவதும், மாணவிகள் ஹிஜாப் அணிவதும் இவர்களது உத்தரவின்பேரில்தான் நடக்க வேண்டுமா? பள்ளிக்குழந்தைகள் என்ன நாடகம் போட வேண்டும் என்பதும், மாணவச்சமூகம் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதையும் உத்தரவிட இவர்கள் யார்? லாவண்யாவின் மரணத்திற்கு மதம்மாற்றம் காரணமாக இருக்குமோ? மர்மம் காரணமாக இருக்குமோ? என்று சொல்லி அவசர, அவசரமாக தேசிய குழந்தைகள் ஆணையம் தமிழகத்திற்கு விரைகிறது. ஆனால், கர்நாடகாவிற்கு இன்றைக்கு வரை எந்த ஆணையமும் விரையவில்லேயே. ஏன்?
சிறார்கள் நடத்திய நாடகத்தின்பால் ஒன்றிய அமைச்சகம் உடனடியாக தலையீடு செய்கிறது. ஆனால், கர்நாடக பிரச்சினையை பேச இந்த அவையிலே நீங்கள் பேச நேரம் ஒதுக்க மறுக்கிறீர்களே. அது ஏன்? துண்டு துணியை வைத்து எங்களது கல்வி உரிமையை பறிக்கவிட மாட்டோம் என்று முழங்கியிருக்கிறார் வீரப்பன் முஸ்கான்.
சகமாணவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டாம். அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார் முஸ்கான். அந்த வார்த்தை மதவெறியை மண்டியிடச் செய்யும் வார்த்தை. அந்த வார்த்தை மாணவியின் வார்த்தையல்ல. ராமனின் வார்த்தை. நபிகளின் வார்த்தை. இயேசுபிரானின் வார்த்தை. மதவெறியை மண்டியிடச் செய்த மனிதன் கற்றுக்கொடுத்த மகத்தான வார்த்தை.” இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, எதிரே எழுந்து பேச முயற்சித்த கர்நாடக எம்.பி.க்களை பார்த்து” நீ உக்காரு பா.. உக்காரு பா” என்று கூறுகிறார். இதையடுத்து, சபாநாயகர் அடுத்த நபருக்கு பேச வாய்ப்பு அளித்தார்.
SS Balaji Interview | “அண்ணாமலை செய்வது மலிவு அரசியல்”- கொந்தளித்த S.S. பாலாஜி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்