மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் புலி வருது... புலி வருது கதை தான் - எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெறப் போவதில்லை. குறிப்பாக தமிழகத்தில் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கப்போவதில்லை - சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ட்விட்டர் பதிவு பின்வருமாறு.. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் அறிவித்தது. இன்று வரை புலி வருது... புலி வருது கதை தான். இந்த கதைக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மதுரை நிகழ்ச்சியில் பேசிய அவர், மற்ற மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் போல் அல்லாமல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மிக உயர்தரம் கொண்டதாக இருக்குm. அதாவது பிற மாநிலங்களில் 500 - 600 கோடி ரூபாயில் உருவான எய்ம்ஸ் மருத்துவமனைகள், மதுரையில் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படுகிறthu. கடந்த 2019 ஆம் ஆண்டில் மதுரையில் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாத நிலையில் இத்தனை ஆண்டு கால தாமதத்திற்கு எத்தனை அழகாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார் பார்த்தீர்களா? . அந்த திறமையால் தான் அவர் பாஜகவின் மாநில தலைவராக உயர்ந்திருக்கிறாரோ? கால் நீட்டி படுக்க ஒரு குச்சி வீடு கூட இல்லையாம், ஒய்யார மாளிகையை கட்டப் போகிறேன் என சொன்னானாம் ஒருத்தன். அவனும் அண்ணாமலையும் ஒன்று தான் போலிருக்கிறது. ஆனாலும் மனுஷன் படு சீரியஸாகத்தான் பேசியிருக்கிறார். 2,000 கோடி ரூபாயில் மதுரை எய்ம்ஸ் உருவாகும் என பேசிய அண்ணாமலை, இன்னும் ஒரு படி மேலே போய் அதன் மூலம் 22,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
தமிழகம் மட்டுமின்றி தென் மாநில மக்களின் தேவையையும் இது பூர்த்தி செய்யப் போகிறதாம். எய்ம்ஸ் பற்றி அண்ணாமலை பேசியதற்கும், மத்திய சுகாதாரத்துறை இது குறித்து வெளியிட்ட அறிக்கைக்கும் எவ்வளவு முரண்பாடு உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். மதுரை தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் அதன் திட்ட அறிக்கையை மத்திய சுகாதாரத்தை இப்போதுதான் வெளியிட்டுள்ளது. கட்டட வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் ஆணை அனுமதி ஆகியவற்றை பெறும் பணிகள் தற்போது நடப்பதாகவும், 2026 வரை கட்டுமானம் நடக்கும் என்றும் 2028 ஆம் ஆண்டில் முழு பயன்பாட்டுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாமலையோ வரும் 2026 ஆம் ஆண்டு மே மாதம் எய்ம்ஸ் திறக்கப்படும், எல்லோரும் போய் ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று தூசி தட்டி இருக்கிறார். பழைய பாட்டு புத்தகத்தை. இவற்றில் எதை நாம் நம்புவது? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படாததால் இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடக்கும் அவலம் இருந்து வருகிறது.
மேலும், இது குறித்து பேசி உள்ள தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ்க்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இருக்கும்போது மதுரை எய்ம்சிற்கு மட்டும் மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை என கூறியுள்ளார். தற்போதைக்கு சுற்றுச்சுவர் மட்டும்தான் கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இங்கே உள்ளங்கை நெல்லிக்கனி போல் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. ரயில் போக்குவரத்து, விளையாட்டு துறை வளர்ச்சி திட்டங்கள், தமிழ் மொழி வளர்ச்சி தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களை கொண்டு வருவதில் ஆர்வமின்மை என பலவகையிலும் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் அணுகுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெறப் போவதில்லை. குறிப்பாக தமிழகத்தில் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.