Madhya Pradesh CM: மத்திய பிரதேசத்திற்கு புதிய முதலமைச்சர்! சிவராஜ் சிங் சவுகானை கழட்டிவிட்ட பாஜக!
மத்திய பிரதேச முதலமைச்சராக சிவராஜ்சிங் சவுகான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை பாஜக கழட்டிவிட்டுள்ளது.
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ம் தேதி நடைபெற்றது.
இதில், தெலங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது. தெலங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். சத்தீஸ்கரில் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.
யார் புதிய முதல்வர்:
முன்னதாக, மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பெரு வெற்றியை பாஜக பெற்றது. ஆனால் மத்திய பிரதேச மாநில புதிய முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் பாஜக மேலிடம் திணறியது. பாஜகவின் மத்திய பிரதேச முகமான நீண்டகால முதல்வர் சிவராஜ் சிங் தம்மைத்தான் மேலிடம் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்தார்.
இதனால் எந்த ஒரு லாபியும் செய்யாமல் டெல்லிக்கும் போகாமல் மத்திய பிரதேசத்திலேயே முகாமிட்டிருந்தார். இன்னொரு பக்கம் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோர் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற தீவிர போட்டியில் இருந்தனர்.
இவர்களுடன் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் இருந்தார். இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கழட்டிவிடப்பட்ட சிவராஜ் சிங்:
இவர் சிவராஜ் சிங் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவர். அடுத்த முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டது சிவராஜ் சிங் சவுகானுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. மத்திய பிரதேச பாஜகவில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதையே இது காட்டுகிறது.
அதேநேரம், சிவராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்து, அங்கு பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய சிவராஜ் சிங் சவுகானை பாஜக கழட்டி விட்டது தவறு என்பது போன்ற கருத்துகளை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் இது தொடர்பாக சிவராஜ் சிங் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரூ.1.50 லட்சம் மதிப்பில் சென்னைக்கு நிவாரணம் அனுப்பிய மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்
மேலும் படிக்க: Madhya Pradesh New CM: பரபரப்பான அரசியல் சூழல்; மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகிறார் மோகன் யாதவ்