முதலமைச்சரின் உத்தரவை ஏற்க மறுப்பு - பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர்
’’கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக நிர்வாகிகள் போட்டியிட்டு வென்ற நிலையில் முதல்வரின் வேண்டுகோளுக்கு பிறகும் பலர் பதவிவிலக மறுப்பு தெரிவித்து வருகின்றனர்’’
திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டும் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி தலைவர் தன்னுடைய பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை. மாவட்ட திமுக தலைமை நாடகமாடுவதாக காங்கிரஸ் கட்சியினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. இதில் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்து திமுகவின் நகர செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி 4 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி வெளிப்படு வருகின்றனர். பேரூராட்சி தலைவர் பதவி தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் துரோகம் செய்துவிட்டார் என போராட்டத்தில் குதித்தனர் இதனால் ஸ்ரீபெரும்புதூர் அரசியல் வட்டாரம் கடந்த சில நாட்களாக பரபரப்பாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் பேரூராட்சி பதவியை இதுவரை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்ய வில்லை. இதனால் கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுகவின் மாவட்ட தலைமை நாடகம் ஆடுவதாகவும், அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலேயே இது போன்ற செயல் நடைபெற்றதாகவும் காங்கிரஸ் கட்சியினர் இடையே பேசப்பட்டு வருகிறது.
ராஜினாமா விவகாரம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் கட்சியினர் சிலரும் திமுக நகர செயலாளர் சதீஷ் கேட்டபோது மழுப்பலான பதிலே அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இடையே கடும் அதிருப்தி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. திமுக நகரச்செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி இதுவரை ராஜினாமா செய்யவில்லை அதேபோல கட்சித் தலைமையும் அவர் மீது மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சினையை திமுக தலைமைக்கு கொண்டு செல்வதற்காக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.