கு.க.செல்வம் எதுவும் செய்யவில்லை என்று பதிவிட்டது ஏன்? - நடிகை குஷ்பு விளக்கம்
ஆயிரம் விளக்கு தொகுதிக்கு கு.க.செல்வம் எதுவும் செய்யவில்லை எனறு டுவிட்டரில் பதிவிட்டது ஏன்? என்று நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் ஒன்றும் செய்யவில்லை என நடிகை குஷ்பூ வெளியிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியது. ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க.வின் சார்பாக நடிகை குஷ்பூ போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் மருத்துவர் எழிலன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய குஷ்பூ, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு எந்தவொரு பணியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
முன்னதாக ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த கு.க.செல்வம் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ள நிலையில், இந்தப் பேச்சு சர்ச்சைக்கு உள்ளானது. சமூக வலைதளங்களிலும் குஷ்பூ உடன் கு.க.செல்வம் பிரச்சாரம் செய்யும் படத்தை வெளியிட்டு நெட்டிசன்கள் குஷ்பூவை விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அதில், தி.மு.க.வில் இருந்தால் மக்கள் பணி செய்ய முடியாது என்பதால் தான் கு.க.செல்வம் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வை எதிர்க்கட்சியாக பார்க்காமல் எதிரிக்கட்சியாக பார்க்கிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.