ஸ்டாலின் ரூட்டை எடுக்கும் கேரளா... ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க திட்டம்... அதிரடி காட்டும் பினராயி...!
தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற கோரி, திமுகவும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களும் இணைந்து குடியரசு தலைவருக்கு மனு அளித்த நிலையில், கேரளாவில் நடைபெற்று வரும் அதிகார போட்டி உச்சத்தை தொட்டுள்ளது.
சமீப காலமாகவே, மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கும் இடையே கடும் அதிகார போட்டி நிலவி வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கானை மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக நீக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
அவருக்கு பதிலாக அந்த இடத்தில் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளர்களை நியமிக்க கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரை அந்த பதவியில் இருந்து நீக்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வந்து அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க கேரள மாநில அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது.
இதன் விளைவாக, ஒரே நடவடிக்கையில் வேந்தருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் ஆளுநரிடம் இருந்து பறிக்கப்படும். இதுகுறித்து அமைச்சரவை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "கடந்த 2007ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய - மாநில அரசுகள் உறவு குறித்து ஆராயும் வகையில் அமைக்கப்பட்ட புஞ்சி ஆணையம், ஆளுநருக்கு வேந்தர்களின் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிராக பரிந்துரை வழங்கியிருந்தது.
இதை, மாநில அமைச்சரவை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவையின் இந்த முடிவு, ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில், மாநில பல்கலைக்கழகங்களின் அதிகாரத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கு செல்லுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்திருந்தார்.
11 மாநில பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு துணை வேந்தர்களை நியமித்ததற்கு எதிராக ஆளுநர் கான் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தார். குறிப்பாக, பதவி விலகும்படி மாநில துணை வேந்தர்களுக்கு ஆளுநர் கான் நோட்டீஸ் அனுப்பியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு எதிராக துணை வேந்தர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து விசாரிக்கும் வரை துணை வேந்தர்களுக்கு எதிராக நடவடிக்கை பிறப்பிக்கக் கூடாது என ஆளுநருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கோள் காட்டி பேசிய கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து, பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாக வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.
ஆளுநர் - மாநில அரசுகளின் மோதலை பொறுத்தவரை, ஆளுருக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்திருந்தது. கேரளாவை போலவே, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கு தமிழ்நாடு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்குவங்கம், ராஜஸ்தானில் இதுபோன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2022 மூலம் மாநிலத்தில் உள்ள 31 பொதுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போதைய ஆளுநரும் தற்போதைய துணை குடியரசு தலைவருமான ஜகதீப் தங்கர் இந்த மசோதாவை மாநில அமைச்சரவைக்கு திருப்பி அனுப்பினார்.
தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற கோரி, திமுகவும் அதன் கூட்டணி கட்சி எம்பிகளும் இணைந்து குடியரசு தலைவருக்கு மனு அளித்த நிலையில், கேரளாவில் நடைபெற்று வரும் அதிகார போட்டி உச்சத்தை தொட்டுள்ளது.