‘இனி அரிக்கேன் விளக்கு விற்பனை சூடு பிடிக்கும்’ - மின்கட்டண உயர்வை கண்டித்து கரூரில் முன்னாள் அமைச்சர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கரூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சட்டம், ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை கண்டித்தும், தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். கையில் அரிக்கேன் விளக்கை ஏந்தியும், இனி இதன் விற்பனை சூடு பிடிக்கும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஊடகங்கள் திமுக அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்கவில்லை என செய்திகளை வெளியிடுகிறார்கள். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததால் திமுக பயப்படுகிறது. மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழியை போடுகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி, மின் கட்டண உயர்வை தொடர்ந்து அடுத்தாக விரைவில் பேருந்து கட்டணமும் உயரும். நிச்சயமாக அடுத்ததாக பேருந்து கட்டணம் உயரும். நம்ம ஊர் அமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார். அடுத்து ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிறோம் எனச் சொல்லி கொள்ளையில் ஈடுபடுவார். பொய்யை மட்டுமே எழுதிய கலைஞரின் பேனாவிற்கு கடலில் சிலை வைக்க வேண்டுமா.
தமிழகம் முழுவதும் தற்பொழுது தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த மூன்று வருடமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு, குறு தொழில்கள் நசிந்து ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு குறித்து அறிவித்த மின்துறை அமைச்சர் சம்மந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையமே மின் உயர்வுக்கு காரணம் என்றும் ஒரு காரணம் சொல்லி மின்சார கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த அரசு வாட்டி வதைக்கிறது என்று பேசினார்.
கரூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொண்டர்களுடன் மின்கட்டண உயர்வை கண்டித்து அறிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்