மின்சாரத் துறை அமைச்சரை ஸ்டாலின் நீக்க வேண்டும் - கரூர் மாவட்ட பாஜக தலைவர்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி கரூர் மாவட்டத்தில் இருந்து போராட்டத்தை தொடங்குவோம் என பாஜக தலைவர் செந்தில்நாதன் தகவல்.
பண மோசடி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் இந்த வழக்கை முதலில் இருந்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் தங்களை இணைக்க கூடிய அமலாக்கத்துறை மனுவும் நிராகரிக்கப்பட்டது. தமிழக மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி (திமுக) 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, அண்ணராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். அந்த வழக்குகளை சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது.
வழக்குகளிலிருந்து விடுவிக்ககோரி மனு தாக்கல்
இந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இது தவிர புகார்தார்களில் ஒருவரான சகாயராஜ் இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டதால், செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். மற்றொரு புகார்தாரரான தேவசகாயம் இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்தார். தங்களை எதிர் மனுதாரராக சேர்க்க சொல்லி ஊழல் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஒரு மனுவும், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று அமலாக்க பிரிவு ஒரு மனுவும் தாக்கல் செய்தன.
இறுதி விசாரணை
எல்லாம் மனுக்களும் நீதிபதி சிவஞானம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் பிரபாகரன் ஆஜராகி அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார். சகாயராஜ் சார்பில் ஆஜரான வக்கீல் எங்கள் தரப்பில் சமரசம் ஏற்பட்டு விட்டது. எனவே, "வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்றார். "வழக்கு ரத்து செய்யக்கூடாது" என்று ஊழல் எதிர்ப்பு இயக்கம் வாதிட்டது. பணம் கொடுத்து வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏமாந்தவர்களில் ஒருவரான தர்மராஜ் என்பவர் சார்பாக, வக்கீல் தினகர் ஆஜர் ஆகி, இந்த விவாகரத்தில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று உத்தரவு பெற்றது தர்மராஜ் தான். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, தொடர்ந்து விசாரிக்க வேண்டும். இப்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் தமிழக போலீசார் நியாயமான விசாரணை நடத்த மாட்டார்கள். எனவே, சிபிஐ அல்லது வேறு ஏதாவது ஒரு விசாரணை அமைப்புக்கு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார். போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அமலாக்க பிரிவு வக்கீல் ரமேஷ் இந்த விவகாரத்தில் ஊழல் பணம் சம்பந்தப்பட்டுள்ளதால் வக்கீல் அமலாக்க பிரிவை இணைத்து கொள்ள வேண்டும் என்றார்.
செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிக்கல்
திமுக ஆட்சி வந்ததும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இடம்பெற்ற போதே பண மோசடி ஊழல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பவருக்கு, ஸ்டாலின் பதவி வழங்கியதாக அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அந்த வழக்கில் இருந்து விடுவிக்க கூறிய செந்தில் பாலாஜியின் மனுவை நிராகரித்து ஐகோர்ட் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதால், அவர் மீதான புகார்கள் தொடர்ந்து நிலுவையில் இருப்பதால் அவருக்கு சிக்கல் தொடங்குகிறது.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் பாஜக தலைவர் வலியுறுத்தல்
கரூர் மாவட்டம் பாஜக தலைவர் செந்தில்நாதன் கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது: மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஐகோர்ட் இப்போது ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. அவர் தாக்கல் செய்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், அவர் மீது மீண்டும் முதலில் இருந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து இருந்தால் அனைத்து ஆதாரங்களையும் அளிக்க முயற்சி செய்வார் என்பதால், அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று அப்போது கூறினோம். ஆனால், இப்போது அவரை நாங்கள் ராஜினாமா செய்ய சொல்லவில்லை. முதல்வர் ஸ்டாலின் தாமதமாக முன்வந்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. காரணம் உண்மையான ஆதாரங்களை அவர் அளிக்கக்கூடாது, மறைக்கக் கூடாது என்பதால் இந்த வழக்கு முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சர் பதிவில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் பாஜக மாநில தலைவர் ஒப்புதல் பெற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி கரூர் மாவட்டத்தில் இருந்து போராட்டத்தை தொடங்குவோம் என்றார். மாவட்ட செயலாளர் சக்திவேல் உடன் இருந்தார்.