தெருத்தெருவாக வட்டமடித்த பாஜகவினர்; துரத்திச் சென்ற போலீஸ் - சிரித்த பொதுமக்கள்..!
போலீசாருக்கு சிக்காமல் இருசக்கர வாகனத்தில் பாஜக நிர்வாகிகள் தெருத்தெருவாக வட்டமடித்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியது.
கரூரில் தடையை மீறி பல்வேறு வழிகளில் இருசக்கர வாகனப் பேரணி நடத்திய பாஜகவினரை 2 முதல் 5 கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து காவல் துறையினர் கைது செய்தனர்.
மத்தியில் பாஜக அரசின் எட்டு ஆண்டுகால ஆட்சியை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டு இருசக்கர வாகன பேரணி துவங்க இருந்த நிலையில், காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இரண்டு ஏடிஎஸ்பி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் துறை தடையை மீறி பாஜகவினர் இருசக்கர வாகன பேரணியை நடத்தினர். காவல்துறையினர் தடுப்புகள் அமைத்திருந்த நிலையில், மாற்று வழிகளில், காட்டுப்பாதையில் பாஜகவினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். பேரணி துவங்கிய இடத்தில் திடீரென்று பாஜகவினர் இவ்வாறு நடந்து கொண்டதால், காவல்துறை அதிகாரிகள் செய்வதறியாது நின்றனர். 2 கிலோமீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை பல்வேறு வழிகளில் துரத்தி சென்று பேரணியாக சென்ற பாஜகவினரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
வெங்கமேடு ஏ-1 திரையரங்கம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டு, கோஷமிட்டபடி பேரணியாக வந்த பாஜகவினர் 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, நான்குக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். காவல்துறை அதிகாரிகளிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முன்னதாக தடையை மீறி இருசக்கர வாகன பேரணி துவங்க இருந்த வெண்ணைமலை தனியார் திருமண மண்டபம் முன்பு, பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாவட்ட இளைஞரணி தலைவர் தீன சேனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை அனுமதி மறுத்தும், தடுப்புகளை மீறி கரூர் மாநகரில் பல்வேறு வழிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக, பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி நடத்தியதால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கு சிக்காமல் இருசக்கர வாகனத்தில் பாஜக நிர்வாகிகள் தெருத்தெருவாக வட்டமடித்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்