‛1744 கோடி ரூபாய் சொத்து தான் இருக்காம்...’ - கர்நாடகா எம்.எல்.சி தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் தாக்கல்!
கர்நாடகாவில் எம்.எல்.சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யூசுப் ஷெரிப் தனது சொத்து மதிப்பு 1744 கோடி ரூபாய் என்று தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடகாவில் எம்.எல்.சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யூசுப் ஷெரிப் தனது சொத்து மதிப்பு 1744 கோடி ரூபாய் என்று தாக்கல் செய்து, கர்நாடகாவின் அதிக சொத்து கொண்ட அரசியல்வாதியாகக் கருதப்படுகிறார்.
கோலார் தங்கச் சுரங்கம் பகுதியைச் சேர்ந்த யூசுப் ஷெரிப், குஜ்ரி பாபு, ஸ்க்ரேப் பாபு ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இவர் ரியல் எஸ்டேட் துறையில் இறங்கி, பணம் சம்பாதிப்பதற்கு முன் ஸ்க்ரேப்களை விற்றுக் கொண்டிருந்ததால் அவர் மேற்கூறிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
பெங்களூரு நகரின் மில்லர்ஸ் டேங்க் பண்ட் சாலையில் வாழும் 54 வயதான யூசுப் ஷெரிப் பெங்களூரு பகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக எம்.எல்.சி தேர்தலில் களமிறங்குகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரது கட்சியைச் சேர்ந்த வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் எனக் கூறப்படுகிறது.
தேர்தலுக்காக அவர் தாக்கல் செய்திருந்த பத்திரத்தில், அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், 5 குழந்தைகள் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார் யூசுப் ஷெரிப். அவருடைய மொத்த சொத்து மதிப்பு 1744 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டிருப்பதோடு, அவரது விவசாய நிலங்களின் மதிப்பு மட்டும் மொத்தமாக 1640 கோடி ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யூசுப் ஷெரிப்பின் சொத்து மதிப்பு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், பாஜகவின் மாநிலத் தலைவர் எம்.டி.பி நாகராஜ் ஆகியோரை விட அதிகமாக இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள யூசுப் ஷெரிப் கர்நாடகாவில் உம்ரா டெவலெபர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருவதோடு, ஐந்து தனியார் நிறுவனங்களிலும் பங்குதாரராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
12 வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள யூசுப் ஷெரிப் சுமார் 67 கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் பத்திரத்தில் தன்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து, 13.43 கோடி ரூபாய் பணத்தை வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் நிலுவையில் கொண்டிருப்பதாகவும் யூசுப் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு வழக்குகளின் கீழ், யூசுப் ஷெரிப் மீது 4 கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவரின் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார், சுமார் 49 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இரண்டு ஃபார்ச்சூனர் கார்களையும் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
`அவர் காங்கிரஸ் கட்சியில் பெரிதும் வெளியில் தெரியாத நபர். அவர் எம்.எல்.சி தேர்தலில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதே எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது’ என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.