மதிமுகவில் புயல்: மல்லை சத்யா உண்ணாவிரதம்! வைகோ-வை நேரடியாக தாக்கி பேசியதால் பரபரப்பு!
Mallai Sathya: "நான் மதிமுகவில் துணை பொதுசெயலாளர் பதவியில் உள்ளேன், இன்னும் நான் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்"

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாளை சென்னையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், மரியாதை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிமுகவில் உட்கட்சி பிரச்சனை
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) கட்சிக்குள் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் மல்லை சத்யா, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கு எதிராக நேரடியாக களமிறங்கியுள்ளார்.
மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்
இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மல்லை சத்யா ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். சென்னையில் நாளை தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
"கட்சியிலிருந்து என்னை நீக்கவில்லை"
செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, "தற்போது நான் மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கிறேன், இன்னும் நான் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், "மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளது" என்று நேரடியாக துரை வைகோவைக் குறிப்பிட்டு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
பொதுமக்கள் மத்தியில் நீதி கேட்டு, நாளை சென்னை சேப்பாக்கம் சிவானந்த சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மல்லை சத்யா அறிவித்துள்ளார். செப்டம்பர் 15-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படாமல் அல்லது கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அடுத்தகட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். இதே காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சிக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மதிமுகவில் குழப்பம்
ஆரம்பத்தில் தனது மகன் துரை வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் பிரச்சனை வந்தபோது தலையிட்டு இருவருடைய பிரச்சனையும், வைகோ தீர்த்து வைத்தார். அதன் பிறகும் இருவரும் சமாதானம் ஆகாததால், தற்போது பிரச்சனை பெரிதாகியுள்ளது. சமீபத்தில் மல்லை சத்யா ஆதரவாளர்கள் மதிமுகவிலிருந்து வெளியேறுவதாக கூறி, தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த மதிமுக கொடிகளை அகற்றினர்.
இந்தநிலையில் தான் தனது ஆதரவாளர்களை தொடர்ந்து மல்லை சத்யா சந்தித்து வந்தார். தற்போது நாளை உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறார். உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த, பிறகு தான் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும், என மல்லை சத்யா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்ணாவின் பிறந்தநாள் அன்று தனிக்கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.





















