Jose Charles Martin : ‘லாட்டரி சீட்டு விற்பனை மாதிரி அரசியலா?’ கட்சி தொடங்குவதற்கு முன்னரே சரியும் ஜோஸ் சார்லஸ்..!
’எடுத்தவுடனே ஹூரோவா ? இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை கேரக்டேரெல்லாம் பண்ணமாட்டீங்களா ? என்று ஒரு திரைப்படத்தில் கேட்பது மாதிரி, கட்சி தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் கனவில் மிதந்துக்கொண்டிருக்கிறார்’

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ், வரும் 14ஆம் தேதி புதுச்சேரியில் புதிய கட்சியை தொடங்கவிருக்கிறார். கோடிக்கணக்கில் அவர்களிடம் பணம் இருந்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் சென்றே, தங்களுக்கு தேவையான விஷயங்களை சாதித்துக்கொள்ள வேண்டி இருப்பதால், தாங்களே அதிகார மையமாக மாற முடிவெடுத்து, திடீரென அரசியலில் குதிக்கவிருக்கிறார் ஜோஸ் சார்லஸ்.
எடுத்தவுடனே ஹூரோவா ?
லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனது புதிய கட்சியை தொடங்கவிருக்கும் ஜோஸ் சார்லஸ், எடுத்தவுடனே ஹூரோவா ? இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை மாதிரியான கேரக்டேரெல்லாம் பண்ணமாட்டீங்களா ? என்று ஒரு திரைப்படத்தில் கேட்பது மாதிரி, கட்சி தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் கனவில் மிதந்துக்கொண்டிருக்கிறார்.
அரசியல் ஒன்றும் லாட்டரி சீட்டு விற்பது மாதிரி சாதாரணம் அல்ல ; அது வியாபாரமும் அல்ல. ஏற்கனவே, புதுச்சேரி களத்தில் பழம் தின்று கொட்டைப்போட்டவர்கள் டஜன் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பணத்தை மட்டுமே பலமாக வைத்து வளைத்துப்போட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த சார்லஸ்சின் எண்ணத்தில் கிலோ கணக்கில் மண் விழத் தொடங்கியிருக்கிறது.
விஜய் கட்சிக்கு தாவிய சார்லஸ் அழைத்த நிர்வாகிகள்
தன்னுடைய கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்க, மாற்றுக் கட்சியான பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியில் உள்ள முக்கிய தலைக்கட்டுகளை விலைக் கொடுத்து வாங்க சார்லஸ் பேரம் பேசியிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் எல்லாம் சார்லஸ் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். குறிப்பாக, பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவராக இருந்த சாமிநாதனிடம் சார்லஸ் தரப்பு பேசிவந்தது, அவர் பணத்தைவிட தனக்கு அரசியல் எதிர்காலம்தான் முக்கியம் என்று விஜயின் லேபிலில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று இணைந்திருக்கிறார்.
ஆதவ் இருக்க பயம் ?
இதனால், அதிர்ச்சியடைந்திருக்கிற ஜோஸ் சார்லஸ் தரப்பு, வரும் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் ஜோஸ் சார்லஸ்சின் சொந்த மாப்பிள்ளையான ஆதவ் அர்ஜூனா தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இருவருக்கும் ஏழாம் பொறுத்தம். ஆதவ் அர்ஜூனா ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிபோல செயல்பட்டார் என்று ஜோஸ் சார்லஸே வெளிப்படையாக பேசிய நிலையில், ஆதவ் அர்ஜூனா இருக்கும்வரை ஜோஸ் சார்லஸை விஜயுடன் நெருக்கவே விடமாட்டார். அப்படியிருக்கும் நிலையில், பணம் என்ற ஒரே ஆயுதத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஜோஸ் சார்லஸ் எப்படி புதுச்சேரி அரசியலில் களமிறங்கி, முதலமைச்சரும் ஆவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
சில்வர் ஸ்பூன் மனநிலையில் சார்லஸ் ?
கட்சித் தொடங்குவதற்கு முன்னரே கட்சியின் கட்டமைப்புக்காக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பலரும் சார்லஸின் ’எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்ற செயல்பாடுகளில் அதிருப்தியாகி, இது சரிபட்டுவராது என்று நினைத்து, அவரவர் இருக்கும் கட்சியிலேயே இருக்கவும் அல்லது விஜய் உள்ளிட்ட முக்கிய முகங்கள் உள்ள கட்சியில் சேர்ந்து தேர்தலை சந்திக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், கட்சித் தொடங்குவதற்கு முன்னரே ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் சரிவை சந்தித்து வருகிறார்.
பணம் பத்தும் செய்யும் – மக்கள் பதினொன்றாவதாக ஒன்றை செய்வார்கள்
பணம் பத்தும் செய்யும் என்றாலும், தேர்தல் என்பதும், அரசியல் களம் என்பதும் வெறும் பணத்தை மட்டுமே வைத்து நிர்ணயிக்க முடியாதது. மக்கள் சக்தி என்பது, பணத்தை தாண்டி பதினொன்றையும் செய்ய வல்லது. அது தெரியாமல், பிறக்கும்போதே தங்கக் கரண்டியை கடித்துக்கொண்டு பிறந்த ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில் கண்ணைக் கட்டிக்கொண்டு களத்தியில் இறங்கத் துடிக்கிறார்.
இரவில் ஒரு பேச்சு, பகலில் இன்னொரு பேச்சு என்று ஜோஸ் சார்லஸ் இருப்பதால், அவரை சுற்றியிருந்த முக்கிய நபர்களும் தங்களுக்கு நாளை சிக்கல் வரும் என்று நினைத்து ‘ஆளைவிடுங்க சாமி’ என்று கும்மிடுப்போட்டு கிளம்பத் தயாராகவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அவர் கட்சித் தொடங்கி தேர்தலை சந்திப்பதே அங்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்





















