JIPMER Hindi Imposition: ‛ஜிப்மரில் எந்த இடத்திலும் இந்தி திணிப்பு இல்லை’ - புதுவை ஆளுநர் தமிழிசை பேட்டி!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு என்பது இல்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதாக வெளியான அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து, இன்று புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
“மத்திய அரசிடம் இருந்து கொடுக்கப்பட்ட குறிப்பில் தமிழ் முதலாவதாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு இருக்கும் தொடர்பு எந்தவிதத்திலும் மாறுபடாமல் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட நான்கு சுற்றறிக்கையில் இரண்டு சுற்றறிக்கை மட்டும் தவறாக முன்னிறுத்தப்பட்டு இந்தி திணிப்பதை போன்று ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் பிரதானமாக எடுத்துக்கொண்ட சுற்றறிக்கையில் ஜிப்மரில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். அனைத்து பெயர்பலகையிலும் முதல் பெயராக தமிழ் இருக்க வேண்டும்.
நோயாளிகளுக்கான அத்தனை அறிக்கையிலும், தகவல்களிலும் தமிழ் இருக்க வேண்டும். இதனால், ஜிப்மரில் எங்கேயும் இந்தி திணிப்பு இல்லை. தமிழ் பிரதானப்படுத்தப்படுகிறது. தமிழ் மக்களுக்கான சேவை முற்றிலும் எந்த தடையில்லாமல் தொடரப்படுகிறது. இங்கு இந்தி திணிப்பு என்பது இல்லை.
ஜிப்மர் மருத்துவமனை தொடர்ந்து மருத்துவ சேவை செய்வதற்கு எந்த தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அது நிர்வாக ரீதியான அறிக்கை.நான் தமிழைப் பெருமைப்படுத்தும் மாநிலத்தில்தான் துணைநிலை ஆளுநராக உள்ளேன். ஜிப்மர் பாகுபாடு இல்லாமல் செயலாற்றி வருகிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு நடைபெறுவதாக கூறி அதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப் போவதாக, பாமக அறிவித்துள்ளது. அதே போல், இந்தி திணிப்பு முயற்சியை திமுக எம்.பி., கனிமொழி கடுமையாக கண்டித்துள்ளனர். இன்னும் சில அரசியல் கட்சிகளும், இதை கடுமையாக எதிர்த்துள்ளன. இதற்கிடையில், சம்மந்தப்பட்ட ஜிப்மர் மருத்துவமனையதில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மேலும் படிக்க : Madurai ; ’இந்து மதத்தை இழிவாக பேசினால் கேள்வி கேட்பேன்; ஆனால் ஜீயர் சொன்னது தப்பு" - மதுரை ஆதீனம் !
மேலும் படிக்க : Chennai double murder: “பணம் உதவிக்கு நோ; தீபாவளிக்கு வெறும் ஸ்வீட்” - இரட்டைக்கொலையில் பரபரப்பு வாக்குமூலம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்