Chennai double murder: “பணம் உதவிக்கு நோ; தீபாவளிக்கு வெறும் ஸ்வீட்” - இரட்டைக்கொலையில் பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை மயிலாப்பூரில் தொழிலதிபரை கொன்றது ஏன் என கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
சென்னை, மயிலாப்பூரில் நகைகளுக்காக ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர்களை கொலை செய்த கார் ஓட்டுனர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளியை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
நடந்தது என்ன?
"கடந்த நவம்பர் மாதம் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா அமெரிக்காவில் உள்ள தங்களது மகளை பார்க்க சென்று, அங்கேயே சில காலம் தங்கியுள்ளனர். இடையில் ஒருமுறை மட்டும் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் பண பரிவர்த்தனைக்காக சென்னை வந்து சென்றுள்ளார்.
இதையடுத்து, இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் அதிகாலை 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளனர். அப்பொழுதுதான் இவர்களை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்து புதைத்துள்ளனர். இரண்டு பேரையும் தனித்தனி அறையில் தாக்கி கொலை செய்துள்ளனர். முதல் கொலையான அனுராதாவை வீட்டின் முதல் தளத்திலும், இரண்டாவது கொலையான ஸ்ரீகாந்தை அடித்தளத்திலும் தாக்கி போர்வையால் சுத்தி புதைத்துள்ளனர்.
(கொலையானவர்கள்)
தொடர்ந்து, திருடப்பட்ட நகைகளை எடுத்துக்கொண்டு தமிழகத்தை விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். கொலை செய்த கிருஷ்ணாவிற்கு ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அவரது வீட்டிலேயே அறை கொடுத்துள்ளார். கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து சில வருடங்களிலேயே டைவர்ஸ் ஆகியுள்ளது. அந்த பெண்ணும் ஒரு தமிழ் பெண். அவர் தற்போது கிருஷ்ணாவுடன் இல்லை. இவர்கள் இருவருக்கும் 15 வயதில் ஒரு பையன் இருக்கிறார். அவர் தற்போது டார்ஜிலிங்கில் படித்து வருகிறார்.
தனது பையனை கிருஷ்ணா டார்ஜிலிங்கில் உள்ள பள்ளியில் சேர்க்கும்போது ரவி ராய் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரவி ராயும் அடிக்கடி கிருஷ்ணாவின் ரூமில் வந்து தங்கியுள்ளார். இந்த சூழலில் எப்போதோ ஆடிட்டர் ஸ்ரீகாந்த் 40 கோடி பண பரிவர்த்தனை பற்றி பேசியுள்ளார். அந்த பணம் ஸ்ரீகாந்த் வீட்டில் இருப்பதாக நம்பிய கிருஷ்ணா, ரவி ராய் கூட்டணி சேர்த்துக்கொண்டு, கொலை செய்யப்பட்ட இருவரும் அமெரிக்காவில் இருந்து சென்னை வரும்வரை காத்திருந்துள்ளனர்.
லாக்கரில் உள்ள பணத்தை எடுக்க எந்த சாவி என்று தெரியாத கிருஷ்ணாவும், ரவி ராயும் சாவி கொத்துக்காக இத்தனை மாத காலமாக பொறுமையுடன் இருந்துள்ளனர். வந்ததும் அவர்கள் இருவரையும் கொலை செய்து சாவி கொத்தை எடுத்துள்ளனர்.
லாக்கரை திறந்து பாரத்தபோது பணம் இல்லாமல், அதற்கு பதிலாக 1000 சவரன் நகை இருந்துள்ளது. நகையை திருடிய அவர்கள் போட்ட கணக்குப்படி 6 முதல் 7 மணி நேரத்திற்குள் கிருஷ்ணாவின் சொந்த நாடான நேபாளத்திற்கு ஓடிவிட்டால் தமிழ்நாடு காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துள்ளனர். அப்படி தப்பிச்செல்லும்போதுதான் கொலையாளிகள் பிடிபட்டுள்ளனர்.
(கொலையாளிகள்)
கொலையாளியின் வாக்குமூலம்..
ரூ.40கோடி பணத்துக்காகவே இருவரையும் கொலை செய்தோம் என கொலையாளி கிருஷ்ணா வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், ''ஸ்ரீகாந்திடம் நான் 7 வருடங்களாக வேலைபார்த்து வருகிறேன். என் மீது அவர் அளவுகடந்து நம்பிக்கை வைத்திருந்தார். கார் ட்ரைவராக இருந்தாலும் நான் வீட்டு வேலைகளையும் சேர்த்து செய்வேன். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. என் மகன் டார்ஜிலிங்கில் படிக்கிறான். நான் ஸ்ரீகாந்த் வீட்டிலேயே தங்கி இருக்கிறேன். ஆனால் நான் வேலை பார்த்த அளவுக்கு ஸ்ரீகாந்த் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. மகன் படிப்புக்கு உதவும்படி ஸ்ரீகாந்திடம் உதவி கேட்டேன்.
அவர் முடியாது எனக் கூறிவிட்டார். அவரிடம் நிறைய பணம் இருந்தும் அவர் உதவவில்லை. தீபாவளி என்றால் நகைகள், துணிகள் மிகவும் ஆடம்பரமாக குடும்பத்துடன் கொண்டாடுவார். அவர் வீட்டிலேயே இருக்கும் எனக்கும் ஒரு கிலோ இனிப்பு பொட்டலம் மட்டுமே கொடுப்பார். அப்போதுதான் ஈசிஆரில் ஒரு நிலம் விற்கப்பட்டது எனக்கு தெரியவந்தது. அந்த பணம் ரூ.40கோடி அவரது வீட்டில் இருக்குமென நினைத்தே திட்டமிட்டோம். ஆனால் பணமில்லை. அதற்கு பதிலாக நகைகள் நிறைய இருந்தன. உண்மை வெளி உலகுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதால் இருவரையும் கொன்று பண்ணை வீட்டில் ஏற்கெனவே தோண்டி வைக்கப்பட்ட குழியில் புதைத்தோம்” என்றார்.