Annamalai: "கொள்ளைக்கார அமைச்சர்கள் நீட்டிற்கு எதிராக கையெழுத்து வாங்குவதா?" : அண்ணாமலை பேச்சு
ஒரு சாதாரண நீட் தேர்விற்காக நம்முடைய குழந்தைகளை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். 50 லட்சம் கையெழுத்து வாங்கி திமுக அரசை டிஸ்மிஸ் செய்வதுதான் நியாயமாக இருக்கும் என அண்ணாமலை விமர்சனம்.
சேலம் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். மூன்று ரோடு, செவ்வாய்ப்பேட்டை, குகை, தாதகாப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்ற அண்ணாமலை பொதுமக்கள், தொழிலாளர்கள், மகளிர் மற்றும் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசினார். மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற யாத்திரையின் முடிவில் தாதகாப்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழகம் முழுவதும் மக்கள் ஏங்கிப்போய் இருக்கிறார்கள். அரசியலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற தெளிவாக இருக்கிறார்கள். தொடர்ந்து ஊழல் செய்யக்கூடிய கட்சிகள் மற்றும் அரசுகளையே பார்த்து பார்த்து மக்கள் சலித்து விட்டார்கள். 5 ஆண்டுக்கு ஒரு முறை இரண்டு கட்சிகளுக்கு மாற்றி மாற்றி ஓட்டு போட்டு எந்த மாற்றமும் வரவில்லை. திமுக அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி 5 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்துள்ளது. ஆக மொத்தம் அமைச்சரவையில் 50 சதவீதம் பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஊழல் என்ற அரக்கன் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை கிடைக்கவிடாமல் செய்வதால் ஒரு ஏழைக் குடும்பம் முன்னேற 7 தலைமுறை தேவைப்படுகிறது.
தமிழக அரசியல்வாதிகள் வடமாநிலத்தவரை இழிவாக பேசுகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரபிரதேசம் பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக 2-ம் இடம் பிடித்துள்ளது. யோகி ஆதித்யநாத் என்ற உன்னத மனிதர் முதலமைச்சராக இருப்பதால் இந்த சாதனை நடந்துள்ளது. எந்த வளர்ச்சியும் கொண்டு வராமல் இலவசம் இலவசம் எனப் பேசி, ஜாதி வெறியை ஏற்படுத்தி தமிழகம் வளர விடாமல் செய்து விட்டனர். தமிழகத்தின் முக்கியமான நேரத்தில் இந்த யாத்திரை நடக்கிறது. எந்த தகுதியும் இல்லாமல், கலைஞர் கருணாநிதியின் மகன் என்பதனால் மட்டுமே முதலமைச்சராக ஸ்டாலின் ஆகி விட்டார். எதுவுமே தெரியாத ஒருவரை முதலமைச்சர் ஆக்கினால் என்ன ஆகும் என்பதை கடந்த 31 மாதங்களில் பார்த்து விட்டோம். முதலமைச்சராக காமராஜர் இருந்தபோது, 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். உலகிலேயே யாரும் இந்த சாதனையை செய்து விடவில்லை. எங்கேயும் பசி இருக்கக்கூடாது என்ற கொள்கையை எம்.ஜி.ஆர் நிறைவேற்றி காட்டினார். 5500 டாஸ்மாக் கடையை கொண்டு வந்ததுதான் முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனை.
இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதுகுறித்து வாய் கிழிய பேசிய ஸ்டாலின், கடந்த 31 மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி சாதனை படைத்து விட்டார். இதன் மூலம் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 3 லட்சம் ரூபாய் கடன் சுமையை ஏற்படுத்தி விட்டார். தமிழகத்தில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் மரத்தடியில் கல்வி பயிலும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 5-ம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையில் பயிலும் அவல நிலை உள்ளது. இதை சரி செய்ய வேண்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே இருக்கிறார்.
ஒரு சாதாரண நீட் தேர்விற்காக நம்முடைய குழந்தைகளை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் கூட நீட் தேர்வை எழுதி டாக்டராகி வருகின்றனர். நம்முடைய குழந்தைகளை பயமுறுத்தி தேர்வு எழுத விடாமல் செய்து விடுகின்றனர். 50 லட்சம் கையெழுத்து வாங்கி திமுக அரசை டிஸ்மிஸ் செய்வதுதான் நியாயமாக இருக்கும். கொள்ளைக்கார அமைச்சர்கள் நீட்டுக்கு எதிராக கையெழுத்து வாங்குவது அநியாயம்.
மக்களுக்கான அரசியல் இலக்கணத்தை மக்களே எழுதும் வகையில் இந்த யாத்திரை நடைபெறுகிறது. சென்னை மழை வெள்ள பாதிப்பின்போது, தென் தமிழக வெள்ள பாதிப்பின்போது, முதல்முறையாக பாஜக தொண்டர்கள்தான் உதவி செய்தனர். வெள்ள பாதிப்பின் போது விரைந்து செயல்பட்டிருக்க வேண்டிய முதலமைச்சர், அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு ஆகியோர் கட்சி நிகழ்ச்சியில்தான் இருந்தனர். வெள்ள பாதிப்புக்கு மூத்த அமைச்சர்களை அனுப்பாமல், உதயநிதியை அனுப்பினால், அவர் திரைப்பட இயக்குநரை உடன் அழைத்து செல்கிறார். ஸ்டார்ட் கேமரா ஆக்சன் என்று சொன்னால்தான் உதயநிதி ஸ்டாலினால் செயல்பட முடியும். ஆனால் முதலமைச்சர் இதுகுறித்த கவலை கொள்ளாமல் அரசியல் கூட்டணிக்காக டெல்லிக்கு சென்று விட்டார். அங்கும் நிதிஷ்குமார் பேசிய இந்தி வகுப்பைத்தான் கேட்டார். அதே நேரத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் இந்தியில் பேசியபோது, உடனடியாக தமிழாக்கம் செய்யக்கூடிய கருவிகள் கொடுக்கப்பட்டன. இதுதான் பிரதமருக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.
பிரதமரின் இந்திப் பேச்சு தமிழர்கள் முழுமையாக புரிந்து கொண்டால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்து விடும். அரசியல் நிகழ்விற்கு வந்த இடத்தில், பிரதமரிடம் நேரம் கேட்டு அவரை சந்தித்து விட்டு முதலமைச்சர் திரும்புகிறார். பிரதமரை பொறுத்தவரை முதலமைச்சர் கேட்டாலும், உதயநிதி கேட்டாலும் நேரம் ஒதுக்குவார். ஆனால் பிரதமரை பார்த்தால் கை கால்கள் நடுங்கும் நிலைக்குத்தான் அவர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் பிறக்காத மனிதர் தமிழ் தமிழ் என உலகின் எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் சிறப்புகளை பிரதமர் மோடி அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கிறார். திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்க்க முடிவு செய்து, 39 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்தாகிவிட்டது. செளராஷ்டிரா மக்களுக்காக 9 நூற்றாண்டுகளாக யாரும் விழா எடுக்கவில்லை. ஆனால், அவர்களுக்காக பிரதமர் மோடி மட்டும்தான் விழா எடுத்தார். நம்முடைய தாய்மொழி தமிழ்தான் உயிரோட்டம் என்பதை உணர்ந்து பிரதமர் மோடி தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், திமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வில் 55 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறாத நிலைதான் உள்ளது. இதுதான் திமுக தமிழை சொல்லித் தரும் லட்சணம்.
2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். உலகத்தின் முதன்மையான நாடாக இந்தியா மாறுவதற்கு நடைபெறும் தேர்தல் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி முதல் ஆட்சியின் போது பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, அடுத்த 5 ஆண்டுகளில் 5 இடத்திற்கு வந்துள்ளது. 2024-ல் வெற்றி பெற்றால் 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.
தமிழகத்தில் 5 பேரில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். டாஸ்மாக் நடத்துவதால் திமுகவினருக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது. விவசாய நிலத்தில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட விவசாயி படுகொலை செய்யப்படும் நிலை உள்ளது. மதுவின் கோரம் வீட்டை நோக்கி வரத் தொடங்கிவிட்டது. அதனால்தான் பாரதிய ஜனதாக் கட்சி தெளிவாக உள்ளது. கள்ளுக்கடையை திறப்பது என்பது பாரதிய ஜனதாக் கட்சியின் முடிவு. பாஜக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படும். இதை வெள்ளை அறிக்கையாக தயார் செய்து ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.
ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய பிரதமர் மோடி, மருத்துவப் படிப்புகளில் பயில்வோரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளது. விமான நிலைய விரிவாக்கப்பணிக்காக ரூ.4 ஆயிரம் கோடி, துறைமுகங்களை மேம்படுத்த ரூ. ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி, சாலைகளை மேம்படுத்த ரூ.43 ஆயிரத்து 935 கோடி, கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.3326 கோடி, முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுகுறு தொழிற்சாலைக்காக ரூ.26,659 கோடி, சாலை வியாபாரிகளுக்கு ஸ்வநிதி திட்டத்தின் கீழ் ரூ.1538 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கெளரவ நிதித் திட்டத்தின் கீழ் 46 லட்சத்து விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.11 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.16,335 கோடி, சுகாதார மேம்பாட்டிற்கு ரூ.12,641 கோடி, கல்வி மேம்பாட்டிற்கு ரூ.12,692 கோடி 9 ஆண்டுகளில் ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திமுக அரசிடம் கணக்கு கேட்டால் அவர்களால் கணக்கு சொல்ல முடியாது.
திமுகவின் சொத்து பட்டியல் ரூ. 3 லட்சம் கோடிக்கு வெளியிட்டோம். பினாமி சொத்துக்களை சேர்க்காமல் வெளியிட்டோம். இதெல்லாம் ஏழை மக்களின் பணம். நான் சொன்னதை விட அருமையான கணக்கு அமைச்சர் பி.டி.ஆர் சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.30 ஆயிரம் கோடி அடித்திருப்பதாக சொன்னார். அந்த டேப்பை வெளியிட்டோம். மிமிக்ரி என்று சொன்னார்கள். வழக்கு போட்டால் முழுமையான டேப் வெளியிடுவேன் என்று சொன்னதும் தூரமாக போய்விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த டேப்புகள் வெளியாகும்" என்று பேசினார்.