’வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு மாண்டுப் போனாரா வல்வில் ஓரி?’ பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது உண்மையா..?
‘வல்வில் ஓரி’ வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு மாண்டு போகவில்லை. மாறாக, சிற்றரசன் ‘மலையமான் திருமுடிக்காரி’ யுடன் நடைபெற்ற போரில் தோல்வியடைந்து, அம்புகளை மார்பில் ஏந்தி வீர மரணம் அடைந்தான்
தமிழக பாஜக தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, இளைஞர்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகிறார். அந்த வகையில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, இவர்கள் எல்லாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்று விழா எடுக்க வேண்டும் என்று உணர்ச்சிப்பொங்க பேசி, அந்த வீடியோவில் பல்வேறு பெயர்களை குறிப்பிடுகிறார்.
குறிப்பாக, வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதர்கள், தீரன் சின்னமலை, அழகு முத்துகோன், சுந்தரலிங்கனார், ராணி மங்கம்மாள், ராணி வேலுநாச்சியார் என்று சொல்லிக்கொண்டே வரும் அண்ணாமலை ‘வல்வில் ஓரி’ என்ற பெயரையும் குறிப்பிட்டு, பின்னணியில் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு, 'வல்வில் ஓரியும் 'சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து போரிட்டு உயிர்நீத்தார் என்று சொல்கிறார்.
Countless leaders had spread nationalism from our beautiful state of Tamil Nadu over the last many centuries….. @BJP4TamilNadu will take them to every single house hold over the next few months…..@CTRavi_BJP @blsanthosh @JPNadda pic.twitter.com/eOexoOUfEi
— K.Annamalai (@annamalai_k) August 2, 2021
வல்வில் ஓரி வெள்ளையனை எதிர்த்து தனிமனிதனாக நின்று, தனது சமூகத்தை திரட்டி போராடி இந்த சுதந்திர வேள்வியை இந்த மண்ணில் விதைத்தார் என சொல்லி, அண்ணாமலை இந்த வீடியோவை பதிவேற்றிய சில நொடிகளில், பல நூறு விமர்சனங்கள் அவருக்கு பின்னூட்டமாக வந்து விழுந்திருக்கின்றன.
வல்வில் ஓரி சுதந்திரப் போராட்ட வீரரா??
— Rajkumar (@raajk_s) August 3, 2021
நீங்கள் உண்மையில் படித்தவரா... IPS ல் தேர்வானவரா... 😡😡😡😡
’வல்வில் ஓரி’ யாரென்றே தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார், ஓரி வெள்ளையனை எதிர்த்து எங்கே போரிட்டார் ? ஆதாரம் இல்லாமல் போகிற போக்கில் இப்படி அடிச்சு விடக்கூடாது என ட்விட்டரில் ’பொங்கல்’ வைத்தனர் நெட்டிசன்கள்.
அண்ணாமலை நீங்க இப்படியே இருங்க ,மாறிடாதீங்க.
— फेस्ट (@amrits1326) August 3, 2021
வல்வில் ஓரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர் என்று படித்திருக்கிறேன்.ஆனால் சுதந்திர போராட்ட வீரர் என்று இப்ப தான் கேள்வி படுகிறேன்
காணொளியை பார்த்து மனம் இலகுவாகி சிரித்தேன் .மிக்க நன்றி.
உண்மையில், வல்வில் ஓரி வெள்ளையனை எதிர்த்து போராடினாரா என்றால் இல்லை என்ற பதிலை பள்ளிக் கூடம் படிக்கும் பச்சக் குழந்தைக் கூட சொல்லும். ஆனால், ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு இது தெரியாதது ஏன் ? சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியலில் 'வல்வில் ஓரியை’ அவர் இழுத்துவிட்டது எதற்காக ? என்று தேடினால் தலைச்சுற்றும் அளவிற்கான காரணங்களை வைத்திருப்பார் அவர்.
ஆனால், வல்வில் ஓரி என்ற பெயரை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. சங்கக் காலத்தை சேர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவர்தான் ‘வல்வில் ஓரி’. சங்கக் காலத்தில் முதல் ஏழு வள்ளல்களாக சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன் ஆகியோரும், இடையேழு வள்ளல்களாக அக்குரன், அந்திமான், கர்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரனும், கடையேழு வள்ளல்களாக பாரி, ஓரி, காரி, அதியமான், ஆய் நள்ளி, பேகன் ஆகிய ஏழு பேரும் குறிப்பிடப்படுகிறார்கள்.
இந்த சங்கக்காலத்தை சேர்ந்த கடையெழு வள்லல்களில் ஒருவரான ஓரி-யைதான், பாஜக தலைவர் அண்ணாமலை சுதந்திர போராட்ட காலத்திற்குள் கொண்டுவந்து வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு உயிர் நீத்தவர் என்று பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருக்கக் கூடிய கொல்லிமலை-யை ஆட்சி செய்த வல்வில் ஓரியை பற்றி பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாக இருக்கும் பழந்தமிழரின் பண்பாடு, வீரம் பற்றி பேசும் ‘புறநானூறு’ கூட வல்வில் ஓரியின் வீரத்தை பற்றி சொல்லியிருக்கிறது. புறநானூற்றின் 152வது பாடலில் ‘வல்வில் ஓரியின்’ வில்லின் வலிமை குறித்து சொல்லும்போது, ’ஓரியின் வில் வளைக்கப்பட்டால் அதில் இருந்து புறப்படும் வில் முதலில் யானையை கொன்று, பிளந்த வாயுடைய புலியை வீழ்த்தி, நீண்ட கொம்புகளை மான் உடலை தைத்து, பானை போன்ற தலையுடைய பன்றியை சாய்த்து, கடைசியாக மரப்பொந்தில் இருக்கும் உடும்பையும் கொன்று மரத்தின் மீது சென்று குத்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வள்ளல்களில் ஒருவராக ஓரி இருப்பதற்கு காரணம், பாணர்கள் பாடிக்கொண்டு கொல்லைமலைக்கு வரும்போது பசியில் வாடியதை கண்ட ஓரி, தனது வில் மூலம் மானை வீழ்த்தி, அதனை கறியை தீயில் சுட்டு, தேனை குழைத்து, தேக்கம் இலையில் வைத்து அவர்களுக்கு கொடுத்து பசியாற்றியதோடு மட்டுமில்லாமல், தனது கொல்லிமலை காட்டின் ஒரு பகுதியையும் பாடல்களை பாடி இசையை வளர்க்கும் பாணர்களுக்கு கொடுத்தார் என்பதற்காகதான். இதனை குறிக்கும் வண்ணமாகதான் – ’அப்போது உணவு கொடுத்தான் ; எப்போதும் காடு கொடுத்தான்’ என்று ஓரியை புகழ்ந்து பாணர்கள் பாடல்கள் பாடியுள்ளனர்.
அண்ணாமலை சொல்வதுபோல, ‘வல்வில் ஓரி’ வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு மாண்டு போகவில்லை. மாறாக, கொல்லிமலையின் செழிப்பை அறிந்த சேரநாட்டு அரசன் ‘பெருஞ்சேரல் இரும்பொறை’, திருக்கோவிலூரை ஆண்ட சிற்றரசன் ‘மலையமான் திருமுடிக்காரி’ யை கொல்லிமலை மீது போர்தொடுக்க வைத்து, வள்வில் ஓரியை வீழ்த்தி கொன்றான் என்பது வரலாறு. ஆனால், இவையாவும் தெரியாமலும், அல்லது அறிந்தும் அறியாமலும்தான் அண்ணாமலை ‘வல்வில் ஓரியையும்’ வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட வீரர்களில் ஒருவராக கொண்டுவந்து அவரும் குழம்பி, மற்றவர்களையும் குழம்ப வைத்திருக்கிறார்.