புதுச்சேரியின் அடிப்படை அரசியலை எப்படி புரிந்துக் கொள்வது?
குறுகிய நிலப்பரப்பில் எதையும் நிரந்தரமாக எதிர்க்கவோ, ஆதரிக்கவோ முடியாது. இதன் காரணமாக அங்கு தமிழகத்தைப் போன்று பிராதான அரசியல் தலைவரும், அரசியல் எதிரியையும் அம்மக்களால் உருவாக்க முடியவில்லை.
வரும் மே 2-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. அங்கு, மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் காணப்படுகிறது.
இந்நேரத்தில், புதுச்சேரியின் அடிப்படை அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. புதுச்சேரியின் பன்முகத்தன்மை என்ன? அது முன்வைக்க நினைக்கும் அடிப்படை அரசியல் என்ன? முன்னெடுக்க மறந்த அரசியல் என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் மிகப்பெரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
தமிழகத்தின் அரசியல் என்ன?
பிரித்தானிய இந்தியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழகத்தில், பிராமணரல்லாதோருக்கும் பிராமணருக்குமிடையே இடையேயான அரசியல் தோன்றியது.
சுதந்திற்குப் பிறகு இந்தியா என்ற ஒற்றை தேசம் கட்டமைக்கப்பட்டது. இந்த தேசம் கட்டமைப்பில் பெரும்பாலும் உயர் வகுப்பினரின் பங்கு முக்கியத்தும் பெற்றது. உண்மையாக, ஆங்கில அறிவு பெற்று மேற்கத்திய அரசியல் தத்துவத்தில் ஆர்வம் கொண்ட இந்திய உயர் வகுப்பினரின் பிரதிபலிப்பாக இந்தியா தேசம் கட்டமைக்கப்பட்டதாக சுடிப்டா கவிராஜ் (Sudipta Kaviraj) உள்ளிட்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு இணையாக தமிழ்ச் சமுதாயத்தில் திராவிட இயக்கம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் இயக்கம் உருவானது. இந்தியா என்ற தேசத்துக்கான மாற்று சொல்லாடல் இங்கே உருவாக்கப்பட்டது. பிராமணரல்லாதோர் இயக்கம் தேசியவாத எதிர்ப்பு இயக்கமாக செயல்படாமல், எது தேசம்? தேசத்தின் அடையாளத்தை யார் நிர்ணயிப்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவதாக அமைந்தது. அனைவரும் உள்ளடக்கிய விளிம்பு நிலை மக்களின் அடையாளமாக திராவிட இயக்கம் கற்பனை செய்யப்பட்டது.
பிராமணரல்லாதோர் அனைவரும் ஒற்றை அடையாளத்துடன் பொருந்திய தமிழர் என்ற கட்டமைப்பை திராவிட இயக்கம் உருவகப்படுத்தியது. திராவிட இயக்கம் தனது இறந்த காலத்தை சேரன், சோழன், பாண்டியன் போன்ற மூவேந்தர்களுடன் இணைத்தது. சிலப்பதிகாரத்தில் தலைவி கண்ணகி தமிழ்த் தாயாக போற்றப்பட்டார். இறந்தகாலத்தைப் பற்றிய நினைவுகளிலும், எதிர்காலத்தைப் பற்றிய தேடலிலும் திராவிட இயக்கம் இந்திய தேசவாதிகளின் அதே தவறை செய்தது. "திராவிட இயக்கம் போட்ட பிச்சை' என்ற ஆர் எஸ் பாரதியின் கருத்து தலித் சமூகத்தின் இறந்த காலத்தை மட்டுமல்லாமால் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியது. இதன் விளைவாக தலித் அரசியல், நாகரிகம், வாழ்வியல் தமிழக அரசியலில் நீர்த்துப் போக தொடங்கின.
புதுச்சேரி அரசியல் என்ன?
பிரஞ்சு ஆட்சி என்ற இறந்தகால முகமூடி இருந்தாலும், புதுச்சேரி ஒரு முகமற்ற, அடையாளத்துக்கு அப்பாற்ப்பட்ட எதிர்காலத்தை விரும்புகிறது. புதுச்சேரியில் உள்ள 60000க்கும் மேற்பட்ட பிரஞ்சிந்தியர்கள் இன்றளவிலும் பிரஞ்சு அதிபர் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். இவர்கள், புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்சிய அரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி பிரான்சிய குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின் சந்ததியினர் ஆவர்.
தமிழச் சமூகத்தில் துறவு என்றால் அனைத்து சமூக நிகழ்வுகளிலும் இருந்து விலகி கொள்வது. ஆனால், புதுச்சேரியில் ரெனோன்சியாசியம் (Renounciation) புது அடையாளங்களை தேடுவதற்கும், புது அரசியல் உறவை நாடுவதற்குமான வாய்ப்பாக அமைந்தது.
21-09-2882 தோற்றம் பெற்று 1962 வரை நடைமுறையில் இருந்த தெக்ரெ சட்டத்தின் கீழ் பிரஞ்சு குடியேற்றப்பகுதியில் இருக்கக் கூடிய இந்திய மக்கள் சட்டமுறையிலும், அரசியல் முறையிலும் பிரஞ்சு மக்களுடைய எல்லா உரிமைகளையும் பெறுவதற்காகத் தங்கள் இந்திய உரிமையைக் கைவிட வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்கள், இதர பிறபடுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்பு நிலை மக்கள், பெண்கள் தங்கள் இந்தியக் குடியுரிமைக் கைவிட்டனர்.
புதுச்சேரியில் ஒடுக்கப்ப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்று விட்டார்களா? இன்னும் அரசியல் தளத்தில் அவர்களின் நிலை தமிழகத்தை விட மோசமாகத் தானே உள்ளது? என்று கேள்வி நம்மில் எழலாம்.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான அரசியலை புதுச்சேரித் தேசியம் என்ற கற்பனையில் தேடவில்லை. அதிகாரம் பெற 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகள் தூசிதட்ட தேவையில்லை என்ற புரிதல் அவர்களிடத்தில் உள்ளது. பன்மொழி, தனிச்சார்பற்ற, உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான தேடலில் தான் சமூகம் மேன்மை பெரும் என்ற புரிதல் அவர்களிடத்தில் உள்ளது. இதைத் தான் நாம் இங்கு உட்கார்ந்து கொண்டு பாண்டிச்சேரி மக்களுக்கு அரசியல் வரவில்லை என்று கூறிக் கொண்டு வருகிறோம்.
ராஜ் கௌதமன், ஆர். ரவிக்குமார் போன்ற பாண்டிச்சேரி குரூப் தலித் எழுத்தாளர்கள் நேருவின் இந்திய தேசம், திராவிட இயக்கங்கள் எழுப்பும் கலாச்சார தேசியம், பாஜக முன்வைக்கும் இந்துத்துவா தேசியம் உள்ளிட்ட அனைத்து தேசியவாத சிந்தாந்தங்களையும் எதிர்க்கின்றனர்.
அரசியல் சொல்லாடலை தீர்மானிப்பது எது?
புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மொத்த பரப்பளவு 492 ச.கி. மீ ஆகும். தமிழகத்தின் மொத்தப் பரப்பளவு, 130.33 இலட்சம் எக்டர் ஆகும். புதுச்சேரி மாநிலத்தின் உத்தேச மக்கள் தொகை 12 லட்சமாகும். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். புதுச்சேரியின் குறைந்த நிலப்பரப்பளவு அதன் அடிப்படை அரசியல் சொல்லாடல்களை நிர்ணயிக்கிறது.
அங்கு ஜாதி, மதம், மொழி ரீதியாக மக்கள் பிளவுப்பட்டிருந்தாலும் குறைவான நிலப்பரப்பபை கொண்டவர்கள் என்ற எண்ணம் புதுச்சேரி மக்களிடம் காணப்படுகிறது. குறுகிய நிலப்பரப்பில் எதையும் நிரந்தரமாக எதிர்க்கவோ, ஆதரிக்கவோ முடியாது. இதன் காரணமாக அங்கு தமிழகத்தைப் போன்று பிராதான அரசியல் தலைவரும், அரசியல் எதிரியையும் அம்மக்களால் உருவாக்க முடியவில்லை.
தமிழகத்தில் அரசியல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இங்கே, சிறந்த நிர்வாக வழிமுறைகள் சிறந்த அரசியலாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இரண்டிற்கும் இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது. ஆனால், புதுச்சேரியில் உள்ளூர் நிர்வாகத்துக்கு ஏற்ற அரசியலை மக்கள் முன்மொழிகின்றனர். புதுச்சேரியில் அரசியல் வெறும் நிர்வாகத்துகான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கை கூட உணர்வு ரீதியாக அல்லாமல் நிர்வாக ரீதியிலான அடிப்படையில் தான் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்திய மொழியியல் ஆய்வு கணக்கெடுப்பில், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பேசப்பட்டு வருகிறது. மேலும், பிரெஞ்சு ஸ்பானிஷ், போர்த்துகீசியம், ஜெர்மன் மற்றும் இத்தாலியன் மற்றும் பிற இந்தோ-ஆரிய மொழிகள் புதுச்சேரியின் பன்மொழிகள் பேசப்பட்டு வருகிறது. அனைத்து மொழிகளும் அங்கு ஒரு வாய்ப்பாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
புதுச்சேரி தனது தீர்வை அடையாள அரசியலில் தேடவில்லை. எனவே, அங்கு கட்சித் தாவல், அரசியல் துரோகம்,அரசியல் கூட்டணி, அரசியல் ஸ்த்திரதன்மை, முதல்வர் - துணை நிலை ஆளுநர் மோதல் போன்றவைகள் எல்லாம் வெறும் அரசியல் வார்த்தைகளாகவே உள்ளன. அனைத்தும் ஒரு வாய்ப்பாகவ கருதப்படுகிறது.
செல்ப் & அதர்ஸ்:
புதுச்சேரியில் பெரும்பாலான மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றன. புதுச்சேரி ஒன்றியத்தை தமிழகத்துடன் இணைத்து விடக்கூடாது என்பதில் அம்மக்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். உண்மையில், புதுச்சேரி மக்களுக்கும், தமிழக மக்களுக்கு இடையேயான கலாச்சார இடைவெளி வராலாற்று ரீதியிலாக இருக்கலாம், பிரஞ்சு அரசியலின் தாக்கமாக இருக்கலாம் (அ) மிகப் பெரிய கட்டுக்கதையாக கூட இருக்கலாம். ஆனால், இந்த இடைவெளியை புதுச்சேரியின் ஓவ்வொரு சாலைகளும், கட்டங்களும், தேநீர் கடைகளும், கடற்கரை சிலைகளும் உறுதி செய்துவருகின்றன.
தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் (self) மற்றவர்களாக ( others) புதுச்சேரி தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். புதுச்சேரியில் தமிழ் பேசும் மக்ககளின் (self) மற்றவர்களாக (others) தமிழர்கள் உள்ளனர். எனவே, இருவருக்கும் இடையேயான இணக்கமும், பிரிவும் நித்தம் நித்தம் புதுபிக்கப்பட்டு வருகிறது.