(Source: ECI/ABP News/ABP Majha)
SP Velumani: 'பட வாய்ப்புத் தேடி சென்னை சென்ற எஸ்.பி.வேலுமணி' பல கோடிகளுக்கு அதிபதி ஆனது எப்படி? – முழு பின்னணி
ஒரு கட்டத்தில் சினிமா கைகூடாது என்பதை உணர்ந்த எஸ்.பி.வேலுமணி, கோவைக்கு திரும்பி அரசியலில் கவனம் செலுத்தத் துவங்கினார். பின்னர், அரசியல் அவருக்கு கை கூடத் தொடங்கியது..!
கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.பி.வேலுமணி. 1969 ம் ஆண்டு பழனிச்சாமி – மயிலாத்தாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். தந்தை பழனிச்சாமி மில் தொழிலாளியாகவும், தாய் மயிலாத்தாள் சத்துணவு அமைப்பாளராகவும் இருந்தனர். பழனிசாமி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பதால், தீவிர அதிமுக தொண்டராகவும் இருந்தார். படித்து முடித்த பின்னர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் எஸ்.பி.வேலுமணி வலம் வந்தார். படவாய்ப்புகள் தேடி சென்னை சென்றார். பல இடங்களில் ஏறி இறங்கியும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சினிமா ஆசை தனக்கு கைகூடாது என்பதை உணர்ந்த எஸ்.பி.வேலுமணி, கோவைக்கு திரும்பி அரசியலில் கவனம் செலுத்தத் துவங்கினார். அதன்பிறகு அரசியல் அவருக்கு கைகூடத் தொடங்கியது.
அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராஜூ மூலம் கோவை மாவட்டத்தில் சின்ன சின்ன ஒப்பந்த வேலைகள் முதலில் வேலுமணிக்கு கிடைத்தது. ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோவை வந்த போது 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வெள்ளை நிற பேண்ட் மற்றும் ஜெயலலிதா உருவம் பொறித்த பனியனை தயாரித்து வரவேற்றார். இதை பார்த்த ஜெயலலிதா ‘யார் இந்த ஏற்பாட்டை செய்தது’ என வேலுமணி குறித்து விசாரித்து, கட்சியில் பொறுப்புகளை வழங்கினார். அப்போது அடித்தது எஸ்.பி.வேலுமணிக்கு யோகம். இதையடுத்து 2001 ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு குனியமுத்தூர் நகராட்சித் தலைவரானர்.
2006 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பேரூர் தொகுதியில் போட்டியிட வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜூ அறிவிக்கப்பட்டார். பின்னர் திடீர் என அவர் மாற்றப்பட்டதால் எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கே.பி.ராஜூக்கு நெருக்கமாக இருந்து கொண்டே, அவருக்கு கிடைத்த எம்.எல்.ஏ சீட்டை தனதாக்கி, ’அமைதிப்படை அமாவாசை’ ஆனார். பேரூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆன எஸ்.பி.வேலுமணி. பின்னர் தொகுதி மறுசீரமைப்பின் போது, பேரூர் தொகுதி நீக்கப்பட்டு அத்தொகுதி தொண்டாமுத்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டபோது, 2011, 2016, 2021 என தொடர்ந்து மூன்று முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
2011 ம் ஆண்டு சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சராக பதவியேற்றார். ஆனால் சில மாதங்களிலேயே பதவி பறிக்கப்பட்டது. இதற்கு சசிகலாவின் உறவினர் ராவணனின் தீவிர விசுவாசியாக எஸ்.பி.வேலுமணி இருந்ததே காரணம் என சொல்லப்பட்டது. அசரவில்லை அவர், மீண்டும் அதே சசிகலா குடும்பம் மூலம் பரிந்துரை செய்ய வைத்து அமைச்சர் பதவியை பிடித்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. உள்ளாட்சி துறை உள்ளிட்ட அதிகாரமிக்க துறைகளின் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி வலம் வந்தார். அதேசமயம் அதிமுக மூத்த தலைவர்களாக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன், செ.ம.வேலுசாமி, ப.வெ.தாமோதரன் உள்ளிட்டவர்களை ஓரம்கட்டி, கட்சியிலும், ஆட்சியிலும் பலம் வாய்ந்த நபராக எஸ்.பி.வேலுமணி உருவெடுத்தார். யாரும் எதிர்பாராத வகையில் குறுகிய காலத்தில் பணம், அதிகாரம் என அசாத்திய வளர்ச்சியை அடைந்தார்.
2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னரும் அமைச்சர் பதவியை எஸ்.பி.வேலுமணி தக்கவைத்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர் செல்வம் அணிகளை இணைத்து டிடிவி தினகரனை கட்சியில் இருந்து வெளியேற்றியதில் முக்கிய பங்காற்றினார். எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாகவும், பாஜகவினரிடம் நெருக்கமானவராகவும் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டார்.
2021 சட்டமன்ற தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளுக்கு எஸ்.பி.வேலுமணி பொறுப்பாளராக இருந்தார். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. அதேபோல 21 தொகுதிகளில் 17 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறச் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, தனது பலத்தை நிரூபித்தார். கட்சிக்குள் செல்வாக்கு மிக்க நபராக உள்ள எஸ்.பி.வேலுமணி அதிமுக சட்டப்பேரவை கொறடாவாக நியமிக்கப்பட்டார். அதேபோல அதிமுகவில் எந்த முடிவும் எஸ்.பி.வேலுமணியை கேட்காமல் எடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளார்.
அதேசமயம் உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர்கள் முறைகேடு, ஊழல் புகார்கள் என அடுக்கடுக்காக புகார்கள் எஸ்.பி. வேலுமணி மீது வைக்கப்பட்டது. தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கி, பல கோடி ரூபாய் ஊழல் செய்து பணம் சேர்த்ததாக புகார்கள் உள்ளன. இந்த புகார்களின் பேரில் தான் தற்போது இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சோதனை நடத்தி வருகின்றனர்.