Jayakumar On Sasikala | சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பில்லை - ஜெயக்குமார் உறுதி
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க 100% வாய்ப்பில்லை எனவும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைவரிடம் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும் அதிமுக வழிக்காட்டுதல் குழு உறுப்பினருமான டி.ஜெயக்குமார் வரும் 14-ஆம் தேதி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க அனுமதி கோரி மனு அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜெயக்குமார், “அதிமுக சட்டமன்ற கட்சியின் கூட்டம் வருகின்ற 14-ஆம் தேதியன்று பிற்பகல் 12 மணியளவில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவகத்தில் நடைபெற உள்ளதாகவும், கொரோனா விதிமுறைகள் இருக்கும் நிலையில் முறைப்படி அனுமதிப்பெற்று நடத்த வேண்டும் என்பதற்காக காவல்துறை தலைவரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் சலசலப்பு இருந்ததாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே எந்த சலசலப்பும் பரபரப்பும் இல்லை என கூறினார். ஓ.பி.எஸை கலந்தாலோசிக்காமல் ஈ.பி.எஸ் முடிவெடுத்தால் வீட்டை முற்றுகையிடுவோம் என நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், கட்சி கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அது தவறு எனவும் இந்த விவகாரம் தொடர்பாக கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
கட்சியை வழிநடத்துவதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் திமுக மற்றும் பிற கட்சிகள் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்ப அதிமுகவினர் இடம் தரக்கூடாது என கேட்டுக்கொண்ட ஜெயக்குமார், அதிமுக எதிர்க்கட்சியாக வந்துள்ள நிலையில் அடுத்தடுத்து மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதில், கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ”சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த நிலைப்பாட்டை ஏற்கெனவே இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வீ.சண்முகம் ஆகியோர் தெரிவித்துள்ளதாகவும், நேற்றும், இன்றும், நாளையும் சசிகலாவை கட்சியில் சேர்க்கவில்லை, சேர்க்கமாட்டோம் என்ற நிலைதான் எப்போதும் தொடரும் எனவும் சசிகலாவை கட்சியில் சேர்க்க நூறு சதவீதம் வாய்ப்பில்லை” எனவும் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவை பொறுத்தவரை சசிகலா பொதுச்செயலாளர் இல்லை எனவும், புரட்சித்தலைவி அம்மா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தலில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேயான வாக்குவித்தியாசம் வெறும் மூன்று சதவீதம்தான் என்று கூறிய ஜெயக்குமார், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு இதுவே உதாரணம் என தெரிவித்தார். வரும் 14-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவகத்தில் நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது