(Source: ECI/ABP News/ABP Majha)
OPS - TTV Dinakaran: தினகரனை வீட்டிற்கே சென்று சந்தித்த ஓ.பி.எஸ்...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் வந்த நீதிமன்ற தீர்ப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொடர் பின்னடைவுகளை தந்து வருகிறது.
சென்னை, அடையாறில் வசித்து வரும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனை அவரது வீட்டிற்கே நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் ஓரங்கட்டப்பட்டு, அ.தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் வந்த நீதிமன்ற தீர்ப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொடர் பின்னடைவுகளை தந்து வருகிறது. இதற்கிடையே, சசிகலா மற்றும் தினகரனை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அவர்களுடன் இணைந்து செயல்பட தயார் என்றும் பேசினார்.
திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் சசிகலாவை சின்னம்மா என குறிப்பிட்டு ஓபிஎஸ் பேசியது அரசியலில் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியிருந்தது.
இந்த பரபரப்பான சூழலில், ஓ.பன்னீர்செல்வம் இன்று டிடிவி தினகரனை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்செல்வத்துடன் இணைந்து முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவியை சந்தித்துள்ளார்.
தனது வீட்டுக்கு வந்த ஓ. பன்னீர்செல்வத்தையும் பண்ருட்டி ராமச்சந்திரனையும் வாசல் வரை சென்று வரவேற்ற டிடிவி, இருவருக்கும் பொன்னாடை அணிவித்தார்.
டிடிவியுடன் கைகோர்த்த ஓபிஎஸ்:
திருச்சியை தொடர்ந்து, ஐந்து மாநாடுகளை நடத்த ஓ. பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்த நிலையில், அதில் கலந்து கொள்ளுமாறு டிடிவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லையில் மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதில், பங்கேற்குமாறு டிடிவுக்கு அழைப்பு விடுத்த பிறகு, சசிகலாவை சந்தித்து பேசவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சசிகலா, டிடிவியை எதிர்த்து ஓபிஎஸ் தரம்யுத்தம் நடத்தினார்.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, சசிகலா, டிடிவி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இணைந்து கட்சியை வழிநடத்தி வந்தனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி வெடிக்க, கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறினார். ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
இப்படி, தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓ. பன்னீர்செல்வம், சென்னை - மும்பை போட்டியின்போது முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசினார். இதில், சபரீசன் சிஎஸ்கே டி-ஷர்ட் அமர்ந்தபடி ஓபிஎஸ்ஸுடன் பேசும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “பூனைக்குட்டி வெளியே வந்தது” என கூறி ஓபிஎஸ் - சபரீசன் புகைப்படங்களை பகிர்ந்தார்.