மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு: மொத்தமாக அள்ளும் திமுக... சட்டம் சொல்லும் சாத்தியம்!
மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் நாளைத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 என அறிவித்துள்ளது. இதில் 2 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 6 இடங்களுக்கான தேர்தலை வரும் அக்டோபர் 4 அன்று நடத்துவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் இரண்டு இடங்கள் தமிழ்நாட்டிலும், அசாம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குத் தலா ஒரு இடமும் காலியாக இருக்கின்றன.
மாநிலங்களவை உறுப்பினர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?
ராஜ்ய சபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை பிரிட்டனின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் என்ற அவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மாநிலங்களவையில் தற்போது 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுள் 233 பேர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்; 12 பேர் நியமன அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.
நியமன அடிப்படையில் உறுப்பினர்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பார். இந்த உறுப்பினர்கள் பொருளாதாரம், விளையாட்டு, இலக்கியம், கலை, சமூக சேவை முதலான துறைகளில் வல்லுநர்களாக இருப்பவர்கள்.

மாநிலங்களவையின் தலைவராக துணைக் குடியரசுத் தலைவர் நியமிக்கப்படுவார். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு, இறுதியாக நாடாளுமன்றத்தில் துணைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும்.
மக்களவை உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்களவை உறுப்பினர்கள் மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றமும், அந்த மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கைக்குத் தக்கவாறு, மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை அனுப்பும். மாநிலங்கள் சேர்க்கப்பட்டாலோ, பிரிக்கப்பட்டாலோ, புதிதாக உருவாக்கப்பட்டாலோ மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஒவ்வொரு மாநிலங்களவை உறுப்பினருக்கும் 6 ஆண்டுகள் பதவிக்காலம் வழங்கப்படும். மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களுள் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் காலியாக இருக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் வாக்கு செலுத்தப் போவதில்லை. அப்படி இருப்பின், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமே மாநிலங்களவைக்குச் செல்ல முடியும் என்பதால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிகும் அனைவரின் பெயரும் அடங்கிய பட்டியல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அதில் எத்தனை மாநிலங்களவை உறுப்பினர்கள் தேவையோ, அந்த எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தாங்கள் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு அருகில் 1,2,3 என நிரப்புவர். அதிக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் மாநிலங்களவைக்கு அனுப்பப்படுவார்.
சட்டமன்றங்களில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. உதாரணமாக, ஒரு மாநிலத்தில் 3 மாநிலங்களவை இடங்கள் காலியாக இருக்கின்றன. 140 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அவையில் ஆளுங்கட்சி 100 உறுப்பினர்களையும், எதிர்க்கட்சி 40 இடங்களையும் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரண்டு கட்சிகளுமே மாநிலங்களவைக்குத் தேவையான மூன்று வேட்பாளர்களைப் போட்டியிட நிறுத்த முடியும்.
எனினும், இதில் வெல்வதற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்குகளை வேட்பாளர்கள் பெற வேண்டும். அதற்காக ஒரு ஃபார்முலா தயாரிக்கப்பட்டிருக்கிறது. மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை (இங்கு 140) நூறால் பெருக்க வேண்டும். காலியாக இருக்கும் இடங்களின் எண்ணிக்கையோடு ஒன்றைக் கூட்டி(3+1), முதலில் கிடைத்த விடையை இதனால் வகுக்க வேண்டும். இந்தக் கணக்கின்படி, தற்போது நமக்கு 3500 என்ற விடை கிடைக்கும். இதனோடு ஒன்றைக் கூட்ட வேண்டும். விடையாக 3501 என வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் 100 வாக்குகள் இருப்பதால், இந்தக் கணக்கின் படி, 3501 வாக்குகள், அதாவது 35 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவரே மாநிலங்களவைக்கு அனுப்பப்படுவார்.

அந்த ஃபார்முலாவை இப்படி எழுதலாம்:
[(சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை x 100) / (காலியாக இருக்கும் இடங்கள் + 1)] + 1
இதே ஃபார்முலாவை மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள தற்போதைய தமிழ்நாடு சட்டமன்றத்துடன் பொருத்திப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். காலியாக இருக்கும் இடங்களின் எண்ணிக்கை 2 ஆகும். இந்த ஃபார்முலாவின்படி, [(234 x 100) / (2+1)] + 1 என்ற அடிப்படையில், விடை 7801 என்று வரும். ஆக, 78 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் மாநிலங்களவைக்குச் செல்வார். திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 159 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பதால், இந்த 2 இடங்களும் திமுகவுக்கே செல்லும்.
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மறைவையடுத்து, கடந்த வாரம் காலியாக இருந்த இடத்தில் திமுகவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மே மாதம், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுகவின் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் பதவி விலகியதைத் தொடர்ந்து, காலியாக இருக்கும் இந்த இரண்டு இடங்களுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

