வாக்காளர் பட்டியலில் மீண்டும் இறந்தவர்களின் பெயர்கள் - கரூர் ஆட்சியரிடம் புகாரளித்த எம். ஆர். விஜயபாஸ்கர்
இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ம வரைவு வாக்காளர் பட்டியலில் மீண்டும் 213 இறந்தவர்கள் பெயர்கள் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டி வருவதாகவும் பல்வேறு ஊராட்சிகளில் மழை நீர், வடிகால் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தி வைத்திருப்பது தொடர்பாகவும், கரூர் மாவட்டத்தில் மணல் அள்ளுவதில் முறைகேடு நடந்திருப்பதை சுட்டிக்காட்டியும், வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரை முறையாக அகற்ற வேண்டும் என 5 கோரிக்கைகளை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம், அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை மனுக்களை அளித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். அவரிடம் ஐந்து கோரிக்கைகள் வைத்துள்ளோம். கரூர் ஆண்டான் கோயில் மேல் பாகம் பகுதியில் கழிவு நீர் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது சரியான திட்டமிடல் இல்லாமல் நடந்து வருகிறது. பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் நிலை உருவாகும். எனவே, அதிகாரிகள் சரியான திட்டமிடல் செய்து அமைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மனு அளித்துள்ளனர்.
வாங்கல் பகுதியில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. கடந்த மாதத்தில் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து, இந்த குவாரிகள் மூடப்பட்டது. ஆனால் , அந்த குவாரியில் 600 யூனிட் மணல் இருந்தது. இந்த மணலை ஆளுங்கட்சியினர் லாரிகள் மூலம் பட்டப்பகலில் கடத்தி சென்றுள்ளனர். அரசு மணல் குவாரியில் விதிமீறி மணல் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த முறை வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது அதில், கரூர் தொகுதியில் மட்டும் இறந்தவர்கள் 648 பேர் நீக்கப்படாமல் இருக்கிறது என சுட்டிக்காட்டினோம். இவைகளில் 460 பெயர்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மீண்டும் 213 இறந்தவர்கள் பெயர்கள் உள்ளது. இதில் 178 பெயர்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு குளறுபடியான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இது கள்ள ஓட்டு போட வழிவகுக்கும். எனவே, இதை கவனத்தில் கொண்டு முறையாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யது வெளியிட வேண்டும் என ஆதாரத்துடன் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தனி மாநிலமாக இங்கு செயல்பட்டு வருகிறது. 18/9/2023 தேதி ராஜ்யசபா எம்பி தம்பிதுரை நிதியிலிருந்து 3.30 கோடி நிதி கரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிதியை முறையாக பயன்படுத்தாமல் அப்படியே வைத்து விட்டனர். இந்த ஆண்டு ரூ.2 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவைகளை முறையாக திட்ட பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.