EPS Plan: அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு பலிக்குமா.?

பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று, தவெக-வை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதானாம். இந்த வியூகத்தில் விஜய் சிக்குவாரா.? சாத்தியக்கூறுகள் என்ன.? பார்க்கலாம்.
அதிமுகவின் கணக்கு
வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக-வை எதிர்க்க வலுவான கூட்டணி தேவை என்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், அதற்கு முதல் படியாக, சிறிது காலமாக இழுபறியில் இருந்த அதிமுக-பாஜக கூட்டணி ஒரு வழியாக இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், இது போதாது என்பது அந்த இரண்டு கட்சிகளுக்குமே நன்றாக தெரியும், அதனால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துப்போட வேண்டும் என்பதே தற்போது அதிமுகவின் கணக்கு என சொல்லப்படுகிறது. அதையேதான் பாஜகவும் யோசிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக தோற்றது வெறும் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான். இந்த முறை விஜய்யும் களத்தில் உள்ளதால், மேலும் வாக்குகள் சிதறி, அது திமுகவிற்கு சாதகமாக அமைந்துவிடும் என்பது தற்போது அதிமுகவின் பயமாக உள்ளது. அதனால், தவெக எப்படியாவது தங்களுடன் இணைத்துக்கொண்டால், இழந்த 3 சதவீத வாக்குகள், தவெகவிற்கான குறிப்பிட்ட சதவீத வாக்குகள், அதிருப்தி வாக்குகள் என கனிசமான அளவு வாக்குகளை அதிகம் பெற்று, ஆட்சியை பிடித்துவிடலாம் என்று அதிமுக நினைப்பதாக தெரிகிறது.
ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, பிரஷாந்த் கிஷோர் போன்றோரை வைத்து, திமுகவை எதிர்ப்பதற்கான வலுவான கூட்டணியை அமைப்பது குறித்து, எப்படியாவது விஜய்க்கு எடுத்துக்கூறி, பாஜக அவரை சம்மதிக்க வைத்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறாராம். ஏற்கனவே அதிமுக உடன் தவெக-வை இணைக்க ஆதவ் அர்ஜுனா முயன்று வந்தது அனைவருக்குமே தெரியும். அதனால், கூட்டணிக்கான சாத்தியம் உண்டு என்று அதிமுக நம்புகிறது.
தவெக இணைவதில் உள்ள சிக்கல் என்ன.?
அதிமுக-பாஜக கூட்டணிப்படி, எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், முதலமைச்சர் கனவில் இருக்கும் விஜய், அதிமுக கூட்டணியில் இணைந்தால், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை எழும். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
மறுபுறம், கூட்டணியில் இணைய, தமிழக வெற்றிக் கழகம் 3 இலக்கத்தில் சீட்டுகள் கேட்பதாக கூறப்படுகிறது. விஜய் அதிமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில், விசிக, சிபிஎம், தவாக போன்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், தவெக-விற்கு 3 இலக்கத்தில், அதாவது 100 சீட்டுகள் என்று வைத்துக்கொண்டால், மீதமுள்ள கட்சிகளுக்கும் அதிமுக சீட்டுகள் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், தனிப் பெரும்பான்மைக்கான 118 சீட்டுகளை தங்கள் வசம் எப்படி வைத்துக்கொள்வது என அதிமுக யோசிப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கூட்டணியை சாக்காக வைத்து, தனிப் பெரும்பான்மையை அதிமுக பெற்றுவிட்டால், முதலமைச்சராவதற்கு அதிமுக யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது அதன் கணக்கு.
இதனிடையே, தேவைப்பட்டால் சீமானையும் கூட்டணியில் இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல், ஏற்கனவே நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார் சீமான். ஆனாலும், கூட்டணியில் இணையப்போவதில்லை என்றே இன்றுவரை கூறி வருகிறார் சீமான்.
திமுகவின் பயம்
அந்த பக்கம் மெகா கூட்டணியை அமைக்க அதிமுக-பாஜக முயன்று வருவது, திமுகவிற்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஏனென்றால், விஜய் தனித்து நின்றால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற திமுகவிற்கு வாய்ப்புகள் அதிகம். விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தால், வாக்குகள் நிச்சயம் சிதறி, அந்த கூட்டணிக்கே அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிடும்.
மறுபுறம், திமுகவும் தற்போது வலவான கூட்டணியை வைத்திருக்கவில்லை. காங்கிரஸ் ஏற்கனவே அதளபாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மதிமுக, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகளுக்கும் சொற்ப அளவே வாக்கு சதவீதங்கள் உள்ளன. அதனால், திமுக கூட்டணியும் தற்போது பலம் வாய்ந்ததாக இல்லை. அதனால்தான், அதிமுக கூட்டணி பலமானதாக அமைந்துவிடக் கூடாது என திமுக தற்போது நினைக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், திமுக என்ன செய்யப்போகிறது.? அதிமுகவின் வியூகத்திற்குள் விஜய் சிக்குவாரா.? சிக்கல்களை களைந்து, தவெக, நாம் தமிழர் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருமா பாஜக.? என பல பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இதற்கான விடை வரும் நாட்களில் தெரிந்துவிடும்.





















