Edappadi Palanisamy: தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது; தமிழகத்தில் 2-ம் இடத்திற்கு தான் போட்டி - இபிஎஸ்
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்கத் தான் போட்டி நடப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று கடலூரில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது, தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்குத் தான் போட்டியே நடக்கிறது என்றும் தெரிவித்தார்.
“இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின்“
கடலூர் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என உதயநிதி கூறுகிறார், ஆனால் அப்படியா செய்கிறார் என கேள்வி எழுப்பிய அவர், இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின் என விமர்சித்தார்.
மேலும், ஊழல், கலெக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக என சாடிய அவர், டாஸ்மாக்கில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடல் திமுக, வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியில் ரோல் மாடல் திமுக என வரிசையாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
“வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை“
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டதாகவும், அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல், 98 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
“கூட்டணியை நம்பி தான் திமுக இருக்கிறது“
மேலும், அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கிறார்கள், அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணியை நம்பி இல்லை, மக்களை நம்பி இருக்கிறது என இபிஎஸ் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருகிறது என உதயநிதி சொல்கிறார், ஆக, கூட்டணியை நம்புகிறார். அதிமுக மக்களோடு தான் கூட்டணி வைத்திருக்கிறது. அடுத்த ஆண்டு தேர்தலில் அதிமுக வெல்லும், அதை பார்க்கத் தான் கோகிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
“அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு நடுக்கம்“
தொடர்ந்து பேசிய இபிஎஸ், அதிமுக பாஜகவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார். 1999 மற்றும் 2001 தேர்தல்களில், திமுக பாஜகவோடு கூட்டணி வைத்து, மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா.? இது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார் இபிஎஸ்.
மேலும், அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்ததில் ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டதாக கூறிய அவர், எதிர்த்து நிற்க தெம்பு, திராணி இல்லாமல் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார் என சாடினார். ஸ்டாலின் அவர்களே, அதிமுக ஆட்சியில் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னால், பதில் சொல்லத் தயார் என்றும் அவர் சவால் விடுத்தார்.
“தமிழ்நாட்டில் 2-ம் இடத்திற்குத் தான் போட்டி“
மேலும், விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கிராமத்தில் கூறுவதுபோல், இந்த மக்கள் எழுச்சியே அதிமுக ஆட்சி அமைவதற்கு அச்சாணி என இபிஎஸ் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என உறுதியாக தெரிவித்த அவர், அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருப்பதாகவும், இரண்டாம் இடத்திற்கத் தான் தமிழகத்தில் போட்டி நடப்பதாகவும் கூறினார்.





















