பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
2026 தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அதிமுக சொந்த பலம் உள்ள கட்சி. திமுக அப்படி அல்ல. கூட்டணியை நம்பி தான் உள்ளது எனவும் விமர்சித்தார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம்
தமிழக சட்டப்பேரைவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி, தேர்தல் வியூகங்கள் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ளாத காரணத்தால் தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜகவுடன்- வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு. பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிப்பதாகவும், வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' தலைமை தாங்குகிறது என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்
மேலும் கூட்டணியில் இடம்பெறும் சுட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமிக்கு ஏகமனதாக வழங்குகிறது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நிர்வாகிகள் மத்தியில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எழுச்சி பயணத்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். மின் கட்டணத்தைக் கேட்டால் ஷாக் அடிக்கிறது என்று கூறிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை ஆண்டுக்கு 5% உயர்த்தினார். இப்போது, கரண்டு பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் நிலை தான் உள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதே போல மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால் தற்போது வரை வழங்கவில்லை, திமுக இளைஞர்கள் ஆதரவை இழந்ததால், தேர்தலை மனதில் வைத்து இப்போது தான் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க ஒப்புதல் கொடுக்கிறார். மேலும் மகளிர் உரிமை தொகையும் அறிவப்போடு நின்றது, நான் தான் தொடர்ந்து குரல் கொடுத்ததால் இந்த திட்டம் பல மாதங்களுக்கு பிறகு செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்
2026 தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தவர், அதிமுக சொந்த பலம் உள்ள கட்சி. திமுக அப்படி அல்ல. கூட்டணியை நம்பி தான் உள்ளது. எனவே அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறும். யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம் என தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும், அடுத்த பொதுக்குழு நடைபெறும் போது அதிமுக ஆட்சியில் இருக்கும் எனவும் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டார். தேர்தல் எப்போது வரும் என மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தேர்தல் வந்தால் திமுக தோல்வி அடையும் என தெரிவித்தார். அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். தமிழக மக்கள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலுக்கு வேறு மாதிரியும் ஓட்டளிப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 கொடுங்க..
பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்டிகை, இந்த பண்டிகையை ஏழை எளிய மக்கள் கொண்டாடிடும் வகையில், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். இதனை பின் தொடர்ந்து எனது ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக குடும்ப அட்டைகளுக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பாக 5000 ரூபாய் வழங்கும் படி கேட்டுக்கொண்டார். எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தவதாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டார்.





















