EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
EPS ADMK: அதிமுக ஆட்சியில் 3 லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகன மானியம் கொடுத்தோம், அதை நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இரு சக்கர மானியம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி உறுதி- எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற களத்தில் இறங்கியுள்ளது அதிமுக, இந்த நிலையில், மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற மக்கள் சந்திப்பு மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்கள் முன்பு பேசிய அவர், எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மாவால் கட்டிக்காக்கப்பட்ட கட்சியான அதிமுக., அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது, ஆட்சி அதிகாரத்தில் அந்த குடும்பத்தினர் தான் வருவார்கள். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வந்தார். அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புக்கு வரமுடியும். ஆனால், அதிமுக ஜனநாயக இயக்கம். சாதாரண தொண்டர் கூட எம்.எல்.ஏ., எம்.பி., முதல்வராக முடியும். சாதாரண கிளைச் செயலாளரால் பொதுச்செயலாளர் ஆக முடியும். உழைப்புக்கு ஏற்ற பதவி வீட்டுக்கதவை தானாகவே தட்டும்.
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் உள்ளவர்களுக்குத்தான் உச்சபட்ச பதவிகள். நாடாளுமன்ற இரு அவைக்கும் கனிமொழி தான் தலைவர், டி.ஆர்.பாலுவை எடுத்துவிட்டனர். அப்படிப்பட்ட கட்சி தமிழகத்தில் தொடர வேண்டுமா? வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது 2025 தேர்தல். எம்ஜிஆர் தீயசக்தி திமுக என்று குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்து 56 மாதம் உருண்டோடிவிட்டது. விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளிகளுக்கு நன்மை செய்தார்களா...? இல்லை எல்லா துறைகளிலும் சுரண்டத்தான் செய்கிறார்கள். 3 கோடி மக்களை சுரண்டி ஒரு குடும்பம் செல்வச் செழிப்பில் இருக்கிறது, அதுக்கு முடிவுகட்டும் தேர்தல் இது.
ஸ்டாலின் சேலஞ்ச் பன்றார், அதிமுக ஆட்சியில் 5% பணிகள் தான் நிறைவேற்றப்பட்டது என்று பொய் செய்தியை சொல்கிறார். அதிமுகவின் வாக்குறுதி 95% நிறைவேற்றப்பட்டது. எப்போதும் மதவாதம் என்கிறார், எங்களைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் கிடையாது, கூட்டணியில் உள்ள கட்சியை பற்றித் தான் பேசுவார்கள். 1999, 2001 ஆகிய தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்து, மத்தியில் ஆட்சியிலும் திமுக பங்கேற்றது. முரசொலி மாறனை இலாகா இல்லாத மந்திரியாக வைத்திருந்தது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி. அப்போது விசிகவும் பாஜகவோடு போட்டியிட்டது. இப்படிப்பட்ட ஒரு கட்சி நம்மை பற்றி விமர்சனம் செய்கிறார்கள்.
திமுக கூட்டணி நிலைக்காது
அடுத்தாண்டு தேர்தலில் எத்தனை அவதாரம் எடுத்தாலும் உங்களை வீழ்த்த மக்கள் முடிவெடுத்துவிட்டார். கள்ளக்குறிச்சியில் உதயநிதி ஒரு கதை சொன்னார். நாங்கள் ஒரு கதை சொல்கிறோம். திமுக என்ற இஞ்சின் இல்லாத காரை கூட்டணி என்கிற லாரி இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இந்த லாரி மக்கர் பண்ணுகிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்கிறது. மேலிடப் பொறுப்பாளர் பேசுவதை வைத்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.
சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்போம் என்று திருமா சொல்கிறார். வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று கம்யூனிஸ்ட் சண்முகம் சொல்கிறார். சில அமைச்சர்கள் 95% வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்றும் சில அமைச்சர்கள் 90% வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்றும் சொல்வது பொய் என்று நாம் சொல்லவில்லை, சண்முகம் சொல்கிறார் ஆக கூட்டணியில் புகைச்சல் கிளம்பிவிட்டது. திமுக கூட்டணி என்ற லாரி மக்கர் செய்கிறது. இந்த கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது. ஸ்டாலின் அவர்களே உங்கள் கூட்டணி நிலைக்காது என்பதற்கு நான் சொன்ன கருத்தே சான்று.
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. திமுக அரசு நிறுத்திவட்டது. நான்காண்டுகளாக லேப்டாப் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இப்போது அறிவித்துள்ளனர். மக்கள் இளைஞர்கள் செல்வாக்கு இழந்துவிட்டதால் 20 லட்சம் பேருக்குக் கொடுப்போம் என்கிறார்கள், கொடுத்தால் தான் நிஜம் ஓட்டுப் போட தகுதியான கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் கொடுக்கிறார்கள்.
மகளிர்களுக்கு ரூ.25 மானியம்
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், திருமண உதவித் திட்டம் தொடரும். மணப்பெண்ணுக்கு பட்டுச் சேலை, மணமகனுக்கு பட்டு வேஷ்டி கொடுக்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 3 லட்சம் மகளிருக்கு இரு சக்கர வாகன மானியம் கொடுத்தோம், அதை நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இரு சக்கர மானியம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதிமுக ஆட்சியின் திட்டங்கள் எதெல்லாம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதோ, அவையெல்லாம் தொடரும்.
பல்லடத்தில் ஸ்டாலின் பெண்களுக்கு நிறைய திட்டம் கொடுத்தோம் என்று பேசுகிறார். எங்கே கொடுத்தீர்கள்? தூய்மை பணியாளர்கள் பெண்கள் தானே? எப்படி குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தீர்கள் தினமும் கொடுமைப்படுத்துகிறீர்கள் செவிலியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் ஏன் செய்ய முடியவில்லை? ஒப்பந்த செவிலியர்கள் நியமித்தது அதிமுக ஆட்சியில் அதனால் நிரந்தரம் செய்ய மறுக்கிறார்கள் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000 கொடுங்க
கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, ஓராண்டு காலம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்கள் கொடுக்கப்பட்டன. மேலும், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் கொடுக்கப்பட்டது. அதே கொரோனா காலத்தில், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.
அதே ஆண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசாசு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் 5 ஆயிரம் கொடுக்கச் சொன்னார், இப்போது நாங்கள் கேட்கிறோம். இதோடு உங்கள் ஆட்சி போகப்போகிறது. கடைசியாக மக்கள் மகிழ்ச்சியடைய ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.





















