Edappadi Palanisami: "38 திமுக எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்?” : நிலக்கரி சுரங்க விவகாரத்தில் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 3 இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு ஏலம் கோரியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டமன்றத்தில் இன்று திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த செய்தி வந்தபோது நீங்களெல்லாம் எப்படி அதிர்ச்சி ஆனீர்களோ, அதேபோல நானும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல நானும் டெல்டாகாரன் எனவே இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதில் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருப்பேன் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைக்கு மத்திய அரசு 101 இடத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிட்டதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் கிட்டதட்ட 105 கிராமங்களில் நிலக்கரி எடுத்து விட்டது. அங்கு மிகப்பெரிய பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதி விவசாயிகளை அப்புறப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய நிலக்கரி சுரங்கம் தொடர்பான அறிவிப்பு அவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆகிய 3 இடங்களில் நிலக்கரி சுரங்கர், டெண்டருக்கான அறிவிப்பு வந்துள்ளது. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அறிவித்தது. அதில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த தொழிற்சாலையும் அமைக்கக்கூடாது என்பது தான் வேளாண் பாதுகாப்பு சட்டத்தில் முக்கிய அம்சம்.
ஆனால் இந்த சுரங்கம் தொடர்பான திட்ட அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதிலில் தெரிய வந்தது. ஆனால் அப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு தவறி விட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான் விவசாயிகள் பாதிக்கும் திட்டம் தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மத்திய அரசுக்கு உட்பட்ட பிரச்சினை. அதனால் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நமது வாழ்வாதார பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்ய முழு மூச்சோடு செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 உறுப்பினர்களும் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு பேச வேண்டியதை இங்கு பேசி என்ன பயன்? என சரமாரியாக எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.