EPS: கலகத்தலைவன் படம்தான் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? முதலமைச்சரை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!
கலகத்தலைவன் எப்படி இருக்கிறது என்பதுதான் நாட்டிற்கு முக்கியமா? என்றும், வீட்டு மக்களைப் பற்றியேதான் முதல்வர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
கலகத்தலைவன் எப்படி இருக்கு..?
மேலும், அவர் கூறியதாவது, “எதிர்க்கட்சியை பழிவாங்குவதிலேதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நாட்டு மக்களை காப்பாற்றுவதில் அவர் கவனம் செலுத்தவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் சென்றார். அப்போது, அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகத்தலைவன் படம் எப்படி ஓடுகிறது என்று கேட்கிறார்.
அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் “யாரும் எழுந்திரிக்கல.. படம் நன்றாகத்தான் ஓடுகிறது” என்றார். இதுதான் நாட்டிற்கு முக்கியமா? ஒரு முதலமைச்சரின் கடமை என்ன? நாட்டு மக்களைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக வீட்டு மக்களைப் பற்றி சிந்திப்பவர்தான் மு.க.ஸ்டாலின். எவ்வளவு பிரச்சினை நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வயிறு எரிகிறது:
மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பில் இல்லை. அதனால், அறிக்கை வெளியிட்டேன். அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டு, எந்த மருந்து இருப்பில் இல்லை என்று அனுப்பி வைத்தால் அவர் சிறந்த முதலமைச்சர். அதைவிடுத்து, தன் மகன் நடித்த திரைப்படம் கலகத்தலைவன் எப்படி இருக்கிறது? நன்றாக ஓடுகிறதா? கஜானா நிரம்புமா? என்று கேட்டால் நாட்டு மக்களுக்கு வயிறு எரியத்தான் செய்யும். நம்மை பற்றி ஒரு கேள்வியும் கேட்காமல், குடும்பத்தை பற்றியும் அவரது மகனைப் பற்றியும் பேசினால் வயிறு எரியும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு படுபாதாளத்தில் சென்றுவிட்டது என்றும், போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு என்றும், போதைப்பொருள் பயன்பாட்டில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும், முதலமைச்சர் திறமையற்று செயல்படுகிறார் என்றும் சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மேலும், அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்து விவாதிக்க எங்கு அழைத்தாலும் நான் வரத் தயார் என்றும், தி.மு.க.வின் 18 மாத ஆட்சி குறித்து விவாதிக்க நீங்கள் தயாரா? என்றும் முதலமைச்சருக்கு சவால் விடுத்தார்.
மேலும் படிக்க: EPS Challenge Stalin: இந்த சாதனையை பேச நான் தயார்.. நீங்க விவாதிக்க தயாரா? முதலமைச்சருக்கு ஈபிஎஸ் நேரடி சவால்..
மேலும் படிக்க: சென்னை : குறை பிரசவத்துடன் பிறந்த குழந்தை.. பிறவி டயாபிராக்மடிக் குடலிறக்க அறுவை சிகிச்சை அளித்து சாதனை