DVAC Raid: விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு : பழிவாங்கும் உணர்ச்சிகளின் வக்கிர நடவடிக்கைகள் - தி.மு.கவுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். கண்டனம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியது தி.மு.க. ஆட்சியின் பழிவாங்கும் உணர்ச்சிகளின் வக்கிர நடவடிக்கைகள் என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் விஜயபாஸ்கர். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைந்தது முதல் முன்னாள் அமைச்சர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 43 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ கழக அமைப்புச் செயலாளரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் தி.மு.க. அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத் தேடி இருப்பது கண்டனத்திற்குரியது.
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், நேற்று சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத தி.மு.க. விடிந்தவுடன் காவல்துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆழகம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம். இந்த இயக்கம் தி.மு.க.வின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து, சாயப்போவது இல்லை. எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதிர்காலத்தில் அடையப்போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ‛ரெய்டு’ -43 இடங்களில் ‛ரவுண்ட் அப்’ !
முன்னதாக, தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை மூலம் ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய கோப்புகள் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்