ஓபிஎஸ் நாளை திமுகவில் இருப்பாரா அல்லது பாஜகவில் இருப்பாரா என தெரியாது - சி.வி.சண்முகம் பேச்சு
ஓ.பன்னீர்செல்வம் நாளை திமுகவில் இருப்பாரா அல்லது பாஜகவில் இருப்பாரா என தெரியாது - நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேச்சு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நல்லாளம் பகுதியில் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும், எத்தனை மு.க.ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தனர். மூன்றாவது பட்ஜெட் போடப்பட உள்ள நிலையில் தி.மு.க.வினர் எதையும் சாதிக்கவில்லை. பொதுமக்கள் விவசாயிகள் தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்டவர்களை வஞ்சிக்கிறது. விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் அறுவடை அதிகரித்தாலும் விலை உயர்த்தப்படாததால் அரிசி விலை கூடுதலாக விற்கப்படுகிறது. சொத்து வரி 150 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது இதையெல்லாம் கேட்டால் மத்திய அரசுதான் காரணம் என்கின்றனர். தற்போது ஏற்றப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகளையும், வியாபாரிகளையும், பொதுமக்களையும் வஞ்சிக்கிறஅரசு திமுக அரசு. தி.மு.க. அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளில் விரைவில் அவர்கள் சிறை செல்வார்கள். நாங்கள் சிறையைக் கண்டு அஞ்ச மாட்டோம் எங்கள் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் எங்களது மக்கள் பணி தொடரும்.
இன்றைக்கு அதிமுகவில் மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்துவிட்டு, கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து, அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர். அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்கிவிடலாம் என நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது. ஓ.பன்னீர்செல்வம் நாளை திமுகவில் இருப்பாரா அல்லது பாஜகவில் இருப்பாரா என தெரியாது. தொண்டர்கள் உள்ளவரை யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நூறு பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது, நூறு துரோகிகளை அதிமுக பார்த்துள்ளது.
இன்றைக்கு மின்சார கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை, ஆண்டுக்கு 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கும் மீட்டர் பொருத்தப்படவுள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் நாங்கள் பயந்துவிடுவோமா. திமுகவின் 13 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. சிறைக்கு செல்ல தயாராக உள்ளோம் என பேசினார். நாங்கள் சிறைக்கு செல்வது ஒன்னும் புதிதல்ல. ஏற்கனவே நங்கள் ஏழு, எட்டு முறை சிறைக்கு சென்றுள்ளோம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போதைய திமுக ஆட்சியில் சாலை அமைக்கும்பொழுது சாலையில் உள்ள ஜீப்பை அகற்றாமலும், அடிப்பம்பை அகற்றாமலும், குடிநீர் அடி பம்பை அகற்றாமலும் சாலைகள் அமைக்கப்பட்டது செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திண்டிவனம் – மரக்காணம் பகுதியில் சாலையின் நடுவில் இருக்கின்ற மரங்களை அகற்றாமல், அதே போன்று மின்கம்பங்களை அகற்றாமல், தரமற்ற சிமெண்ட்டுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. ங்களுக்கு 18% கமிஷன் மட்டும் வந்தால் போதும் என்று தரமற்ற மற்றும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடைபெறுகின்ற இத்தகைய பணிகளை தமிழக அரசும், நெடுஞ்சாலை துறையும் கண்டும் காணாமல் இருக்கின்றது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று மாநிலங்களை உறுப்பினர் சி.வி சண்முகம் கேள்வி எழுப்பினார்.