செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா..? சட்டம் என்ன சொல்கிறது..?
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மாநில அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அமைந்துள்ளது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில், டெல்லி அரசின் அதிகாரங்களை நிலைநாட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிய ஆளுநர்கள்:
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் சூழலில், அவசர சட்டம் விவகாரம் மாநில அரசுகளுக்கு பெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மாநில அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த இரண்டு துறைகளை இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்தளிக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அதனை ஆளுநர் ஏற்க மறுத்திருப்பது தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்திருப்பதாக ராஜ்பவன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடுவதற்கு முன்பாகவே இதுதொடர்பான தகவல்கள் கசியவிடப்பட்டன.
முதலமைச்சர் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர்:
இதன் பிறகுதான் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். "கடந்த 31ஆம் தேதியே அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என ஆளுநர் ரவி முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ’வழக்கு இருப்பதற்காக அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது’ என்று அடுத்த நாளே (1-ம் தேதி) பதில் கடிதம் அனுப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அமைச்சரவை இலாக்கா மாற்றம் குறித்த முதலமைச்சரின் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பி உள்ளார். இதனையடுத்து தற்போது மீண்டும் முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்’’ என்று உண்மையை உடைத்தார் அமைச்சர் பொன்முடி.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பெஞ்சமின், விஜயபாஸ்கர் ஆகியோர், ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். சமீப காலமாக, மாநில அரசுகளின் அதிகாரங்களை நிலைநாட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வரும் சூழலில், யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என ஆளுநர் கூறியிருப்பது புதிய அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
திரும்பும் வரலாறு:
இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே அமைச்சர்களின் துறை மாற்றி அமைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்கனவே நடந்துள்ளது.
கடந்த 1991 முதல் 1996 வரையிலான காலத்தில், அதிமுக அமைச்சர்களாக பதவி வகித்த ஜெயக்குமார், செங்கோட்டையன், மதுசூதனன், லாரன்ஸ், இந்திரா குமாரி ஆகியோரின் துறைகளை 1994 நவம்பர் 16ஆம் தேதி ஜெயலலிதா திடீரென மாற்றினார். ஆனால், அன்றை ஆளுநர் சென்னா ரெட்டி அதற்கு ஒப்புதல் தரவில்லை.
ஆளுநர்– முதல்வர் மோதலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையான அமைச்சரவை மாற்றங்களைக் கிடப்பில் போட்டு வைத்தது ஆளுநர் அலுவலகம். சென்னா ரெட்டியின் ஒப்புதல் கிடைக்காததால் அமைச்சர்களின் துறைகளை ஜெயலலிதாவே மாற்றி அமைத்தார்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், மதுசூதனன், லாரன்ஸ், இந்திரா குமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் துறைகளை மாற்றி அமைக்க முடிவு செய்து, அதற்கான ஃபைலை ஆளுநர் சென்னா ரெட்டியின் ஒப்புதலுக்காக 1994 நவம்பர் 8ஆம் தேதி ஜெயலலிதா அனுப்பி வைத்தார். அதில், "போக்குவரத்துத் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்குக் கூடுதலாக வனத் துறையை ஒதுக்க வேண்டும்.
கைத்தறி துறையை மாற்றிவிட்டு, மதுசூதனனுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அளிக்க வேண்டும். பிற்பட்டோர் நலன் துறை அமைச்சர் ஜெயக்குமாருக்குக் கூடுதலாக மீன்வளத் துறையை ஒதுக்க வேண்டும். சமூக நலத் துறை அமைச்சர் இந்திரா குமாரிக்கு கூடுதலாக கைத்தறி துறையை அளிக்க வேண்டும்.
லாரன்ஸிடம் இருக்கும் வனத்தை மாற்றிவிட்டு, அவருக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலன் துறை ஒதுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த துறைகள் மாற்றம் தொடர்பான ஃபைல் நவம்பர் 15ஆம் தேதி வரை சென்னா ரெட்டியிடம் இருந்து திரும்பி வரவில்லை.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா..?
இதனால், கோபம் அடைந்த ஜெயலலிதா அரசு அலுவல் விதியின் கீழ் முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களின் இலாகாக்களை நவம்பர் 16ஆம் தேதியன்று மாற்றினார். அதுபற்றிய உத்தரவு ஃபைலை சென்னா ரெட்டியின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதற்கு நவம்பர் 21ஆம் தேதி வேறு வழியில்லாமல் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார் சென்னா ரெட்டி.
இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தொடரப்பட்டது. "அரசியல் சாசனம் 167ஆவது பிரிவின்படி முதலமைச்சர் செயல்படவில்லை. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவை ரத்து வேண்டும்" என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரித்தார். ஜெயலலிதாவும் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கரும் அட்வகேட் ஜெனரல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மூலம் பதில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "அரசியல் சாசனத்தின்படிதான் என் கடமைகளை செய்கிறேன். சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியதன் மூலம் அரசியல் சாசன நெருக்கடியை நான் உருவாக்கியதாகவும் இதுபோன்று எந்த முதலமைச்சரும் உத்தரவு பிறப்பித்தது கிடையாது என்றும் மனுதாரர் ராமு கூறியுள்ளார்.
அரசு அலுவல் விதிகளில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில்தான் அமைச்சர் இலாகா மாற்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்தேன். இதனை அரசியல் சாசனத்திற்கு விரோதமாகக் கருத முடியாது. பொது நலனுக்கான அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது அவசியம். அவசரம் காரணமாக அரசு அலுவல் விதிகளைப் பயன்படுத்தி அமைச்சர்கள் இலாகா மாற்றத்திற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், நானோ அல்லது அரசோ எடுத்த நடவடிக்கையில் எவ்வித முறைகேடோ சட்டவிரோதமோ இல்லை" என ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.
அரசு அலுவல் விதியின் கீழ் முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களின் இலாகாக்களை முதலமைச்சரே மாற்ற முடியும். அதேபோல, குறிப்பிட்ட நபரை துறை இல்லாத அமைச்சராக தொடர வைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தெரிந்தும், அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடரக்கூடாது என ஆளுநர் கடிதம் எழுதியிருப்பது அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.