சினிமாவில் லாக்கப் டெத் ஆதரிப்பாங்க.. அரசியலில் நடிப்பாங்க.. விஜய்யை அட்டாக் செய்த கனிமொழி
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமாெழி தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பேசினார்.

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கிய பிறகு தீவிர அரசியலில் களம் கண்டு வருகிறார். கடந்த மாதம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். பின்னர், நேற்று விஜய் தலைமையில் லாக்கப் மரணத்தால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய், திருப்புவனத்தை சேர்ந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதை போல கடந்த 4 ஆண்டுகளில் லாக்கப் மரணத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பத்தினரிடமும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பேசியிருந்தார். இதற்கு ஆளும்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விசிக தலைவர் திருமாவளவன், தேர்தல் லாபத்திற்காக அரசியல் நாடகம் விஜய் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என தெரிவித்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்.பி கனிமொழி விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கனிமொழியிடம் விஜய் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கனிமொழி, சில நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும் படங்களில் லாக்கப் மரண சம்பவங்களை நியாயப்படுத்தும் விதமாக நடிக்கிறார்கள். புதிதாக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வது பெரிய நகைச்சுவையாக இருக்கிறது என விமர்சித்தார்.





















