ADMK - BJP: அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே ரகசிய உறவு தொடர்கிறது - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
"கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும் எடப்பாடி மீதும், வேலுமணி மீதும் ஏன் இன்னும் வருமானவரி, அமலாக்கதுறை சோதனை செய்யவில்லை? "
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக விளையாட்டு அணி சார்பில் பரிசளிப்பு விழா இன்று கோவை அருகே கோவை புதூர் மைதானத்தில் நடைபெற்றது.
சிறையில் செந்தில் பாலாஜி:
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் தயாநிதிமாறன் எம்பி தலைமையில் கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் இந்த விழாவில் எம்.பி.தயாநிதி மாறன் பேசினார். அப்போது பேசிய அவர், ”அமைச்சர் செந்தில் பாலாஜி எதை செய்தாலும் மிகச்சிறப்பாக செய்வார். அவருடைய சிஷ்யன் வடக்கு மாவட்ட தலைவர் ரவி, அதே அளவிற்கு விழாவை சிறப்பாக செய்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை வேண்டுமென்று சிறையில் வைத்துள்ளனர். அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற வேண்டுமென சிறையில் வைத்துள்ளனர்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி?
வேலுமணி பற்றி குறை சொல்லவில்லை, இதுநாள் வரைக்கும் பாஜகவுடன் தான் கூட்டணியில் இருந்தீர்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் வாயை திறந்துள்ளீர்களா? ஒரு கேள்வி கேட்டுள்ளீர்களா? ஆனால் பொள்ளாச்சி எம்.பி 240 கேள்விகளை கேட்டுள்ளார். திமுக பாராளுமன்றத்தில் சென்றவுடன் தலைகீழாக உள்ளது. அந்த அளவிற்கு கேள்விகளை தமிழ்நாட்டிற்கு கேட்டுள்ளோம்.
உலக முதலீட்டார்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்/ உதயநிதி விளையாட்டு துறை அமைச்சர் ஆனவுடன் உலகரங்கில் நடைப்பெறும் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தினார். செஸ், கேலோ இந்தியா போட்டிகள் மாவட்டம் வாரியாக நடத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. தமிழ்நாடு பதக்க பட்டியலில் இந்திய அளவில் 2வது இடத்திற்கு வந்துள்ளது.
ரகசிய உறவு:
நாம் அனைவரும் சமம். நாம் யாருக்கும் எதிரி இல்லை, பிறப்பால் அனைவரும் சமம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் மதவெறி அரசியலை கையாண்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மதவெறி கலச்சாரம் நடக்காது. நாம் கட்டும் வரி பணத்தை நமக்கு முழுமையாக ஒன்றிய அரசு கொடுப்பது இல்லை. பால், வெண்ணை எது வாங்கினாலும் வரி கட்ட வேண்டும். நாம் ஒரு ருபாய் கொடுத்தால் 29 பைசா தான் மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால் உ.பி மாநிலம் கொடுக்கும் 1 ரூபாய்க்கு 2 ரூபாய் 17 பைசா கொடுக்கிறது.
தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள் பாஜக. அதற்கு துணை போனவர்கள் அதிமுக. செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார்கள். ஆனால் கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னும் எடப்பாடி மீதும், வேலுமணி மீதும் ஏன் இன்னும் வருமானவரி, அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை? அவர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. நாங்கள் வெளியே வந்தது மாதிரி நடிக்கிறோம், நீங்களும் அப்படியே நடியுங்கள் என இரு கட்சிகளிடையே ரகசிய உறவை வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.