எனக்கும், என் குடும்பத்திற்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் திமுக எம்.பியும், எம்.எல்.ஏவும்தான் காரணம் - வன்னியர் சங்க நிர்வாகியின் முகநூல் பதிவால் பரபரப்பு
’’எந்த வித பிரச்சனை ஏற்பட்டாலும், தி.மு.க.,வை சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி.,யும் அண்ணன் ராமலிங்கம், அரசு கொறடாவும், திருவிடைமருதுார் எம்.எல்.ஏ.,வுமான நண்பர் செழியன் ஆகியோரை சாரும்'’
ஆடுதுறை பேரூராட்சியில் வெற்றி பெற்ற, பா.ம.க.,கவுன்சிலரும், வன்னியர் சங்க நிர்வாகி, எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், தி.மு.க., மயிலாடுதுறை எம்.பி., திருவிடைமருதுார் எம்.எல்.ஏ.,தான் பொறுப்பு என தனது பேஸ்புக் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் 15 வார்டுகளில், தி.மு.க., அதன் கூட்டணியினர் 7 வார்டுகளிலும், பா.ம.க., 4, அ.தி.மு.க., சுயேட்சைகள் தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
பெரும்பான்மைக்கு எட்டு கவுன்சிலர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், கடந்த 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலுக்கு, 15 பேரில் தி.மு.க., கவுன்சிலர்கள் மூன்று பேரை தவிர 12 மட்டுமே வந்திருந்தனர். வராத கவுன்சிலர்களை மாற்றுக் கட்சியினர் கடத்தி விட்டதாக கூறி, ம.தி.மு.க., வேட்பாளரான சரவணன், மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் கண்ணன், ஹமீம்நிசா ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்தில், அதிகாரிகளை பணி செய்ய விடாமலும், படிவங்களை கிழித்த எரிந்தும் ரகளை செய்ததால் தேர்தல் ரத்தானது. இது தொடர்பாக இவர்கள் நான்கு பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பா.ம.க.,வை சேர்ந்த ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு கவுன்சிலர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்த கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், பா.ம.க.,கவுன்சிலரும், வன்னியர் சங்க மாநில துணை தலைவருமான ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில், எனக்கும், எனது குடும்பத்தினர் மற்றும் என்னை சார்ந்தோர்க்கும் எந்த வித பிரச்சனை ஏற்பட்டாலும், தி.மு.க.,வை சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி.,யும் அண்ணன் ராமலிங்கம், அரசு கொறடாவும், திருவிடைமருதுார் எம்.எல்.ஏ.,வுமான நண்பர் செழியன் ஆகியோரை சாரும் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதிவால் தஞ்சை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ம.க.ஸ்டாலின் கூறுகையில், எனது ஆதரவாளர்களிடம் என்னை மிரட்டும் தோணியிலும், போலீசாரை ஏவி, குண்டாஸ் மற்றும் பல்வேறு வழக்கு தொடரப்போகிறோம் என போலீசார் மறைமுகமாக, எனக்கு வேண்டியவர்களிடம் பேசியுள்ளனர். என்னை பழிவாங்க வேண்டும் என்று இருக்கும் எதிரிகளிடமும் பேசி வருவதாக தெரிகிறது. தி.மு.க.,வினர் எனது ஆதரவு கவுன்சிலர்களையும் மறைமுகமாக மிரட்டி வருகின்றனர். இதற்கு பின்புலமாக நான் போஸ்டரில் குறிப்பிட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்றார்.