எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
பிரபாகரனுடன் சீமான் எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழீழத்திற்காக இலங்கையில் ஆயுதம் ஏந்திய போராடிய விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தீவிர ஆதரவாளர். தமிழ் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் பாதையில் பயணிக்கும் சீமான், பிரபாகரனைச் சந்தித்து பல விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக பல முறை பொதுக்கூட்டத்திலும், பேட்டியிலும் கூறியுள்ளார்.
பிரபாகரனுடன் சீமான்:
மேலும், அவர் பிரபாகரனைச் சந்தித்ததற்கான ஆதாரமாக பிரபாகரனுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது. பிரபாகரனை அவர் சந்தித்தது சில நிமிடங்கள் மட்டுமே என்றும், பிரபாகரன் இவரிடம் ஏதும் பெரியதாக ஆலோசிக்கவில்லை என்றும் சில அரசியல் தலைவர்கள் சீமானை விமர்சிப்பது உண்டு. இந்த நிலையில், சீமான் - பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது என்றும், அது எடிட் செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எடிட்டிங் புகைப்படம்:
திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தானே அந்த புகைப்படத்தை எடிட் செய்ததாக பதிவிட்டிருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சங்ககிரி ராஜ்குமார் கூறியிருப்பதாவது, தொலைக்காட்சியில் பணியாற்றியபோது செங்கோட்டையன் என்பவர் பணியாற்றினார். அவர் சீமானுக்கு நெருக்கமானவர். அந்த காலகட்டத்தில் செங்கோட்டையனுக்கு நான் பல வேளைகள் செய்து கொடுத்துள்ளேன். அப்போது, தலைவர் பிரபாகரன் மகேந்திரனுடன் இருப்பது போன்ற பல படங்களை டிவிடியில் எடுத்துக்கொண்டு வந்தார்.
ஃப்ரேம்:
சீமான் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு வந்து இரண்டையும் பக்கத்தில், பக்கத்தில் வைத்து தருமாறு என்னிடம் கேட்டார். நான் எதற்கு? என்று கேட்டபோது சர்ப்ரைசாக கொடுப்பதற்காக வேண்டும். கொடுத்தால் அவர் வீட்டில் ஃப்ரேம் போட்டு வைத்துக் கொள்வார் என்றார். அப்போது, இதுபோன்று வேலை செய்வதில் ஆர்வம்.
ஆனால், இப்போது அந்த புகைப்படத்தைப் பார்த்தால் நிறைய குறைகள் தெரியும். அவருடைய தலைக்குப் பின்னால் நிழல் இருக்கும். சீமான் அண்ணன் கைக்குப் பின்னால் நிழல் இருக்காது. தலைவர் பிரபாகரன் படத்திற்கு பின்னால் அந்த நிழல் இருக்காது. அந்தளவு தெளிவாக பண்ணவில்லை. ஃப்ரேம் போட்டு மாட்டுவதற்காகத்தானே என்று பெரியதாக பண்ணவில்லை. அப்படி பண்ணிக் கொடுத்ததுதான் அந்த புகைப்படம்.
சொல்லாதே என வேண்டுகோள்:
அது பிற்காலத்தில் அவர் நேரில் சந்தித்ததாக உலா வரும்போது, நான் செங்கோட்டையனிடம் நேரில் கேட்டேன். நம்மளால ஒரு அரசியல் தலைவரை உருவாக்கியிருக்கோம். அவர் வளர்ந்து வந்தால் நமக்கு நல்லது தானே என்றார். அப்போது எனக்கு நான் கொடுத்த புகைப்படம் நல்ல விஷயத்திற்கு பயன்படுகிறது என்று நினைத்துக் கொள்வேன்.
நடுவில் சிலர் திரைத்துறையில் எடிட் செய்த புகைப்படம் இது என்று கூறும்போது, அப்போது செங்கோட்டையனிடம் கேட்டபோது நான் ஏதும் சொல்லவில்லை. நீயும் சொல்லாதே என்றனர். தலைவர் இல்லாதபோது ஒரு நல்ல விஷயத்தி்ற்கு முன்னெடுத்து நடத்தும்போது ஒரு நல்ல விஷயத்திற்கு பயன்படுகிறது என்று சொல்லும்போது நான் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. இப்படித் தகவல் வரும்போது நீங்கள் சொல்லிட்டீங்களா? என்று செங்கோட்டையனிடம் கேட்பேன்.
உண்மை என்ன?
சீமான் - பிரபாகரன் பக்கத்தில் இருக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது. இதுதவிர, அவர்கள் சந்திப்பின்போது வேறு புகைப்படம் எடுத்தார்களா? சந்தித்தார்களா? என்பது குறித்து நான் ஆதாரப்பூர்வமாக ஏதும் உறுதியாக சொல்ல இயலாது. இந்த புகைப்படம் மட்டும் உண்மையாக எடுக்கப்பட்டது இல்லை. நான்தான் அதை எடிட் செய்தேன். இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவர் சொல்லும் பல தகவல்கள் உண்மைக்கு முரணாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்ககிரி ராஜ்குமாரின் இந்த கருத்து இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இடும்பாவனம் கார்த்தி சீமான் பிரபாகரனுடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

