Devendra Fadnavis: அஜித் பவார் சரத் பவாரை எதிர்த்தது ஏன்? - உண்மையை உடைத்த தேவேந்திர ஃபட்னாவிஸ்
ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏபிபி நெட்வர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் கலந்து கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தின் துணை முதலமைச்சர், தேவேந்திர ஃபர்னாவிஸ் சமகால அரசியல் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர், “வரும் லோக்சபா தேர்தலில் எங்களுக்கு சவால் இல்லை என்று கூறமாட்டேன். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நாங்கள் பெற்ற இடங்களுக்குக் குறையாது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாங்கள் வென்ற மக்களவை தொகுதிகளைவிடவும், இம்முறை நாங்கள் வெல்லும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது” எனக் கூறியுள்ளது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் நீங்கள் எத்தனை இடங்களை பெறுவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஃபட்னாவிஸ், ”மகாராஷ்டிரா லோக்சபா தேர்தலில் எங்களுக்கு சவால்கள் இல்லை என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் . கடந்த இரண்டு தேர்தல்களிலும் 48 மக்களவைத் தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இப்போது அதற்கு மேல் வெல்ல வேண்டுமானால் கடுமையாக உழைக்க வேண்டும். எங்களது நோக்கம் கடந்த முறை வென்றதை விடவும் அதிகமாக வெல்வதுதான். ஆனால் கடந்த இரண்டு தேர்தலில் நாங்கள் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறையாது என உறுதியாக கூறுகின்றேன்.
ஒவ்வொரு அரசாங்கமும் செயல்படும் முறை உண்டு. கடந்த அரசாங்கத்தில் நான் முதலமைச்சராக இருந்தேன். அந்த நேரத்தில் எனது உரிமைகளும் வேலை செய்யும் திறனும் வேறு. இப்போது துணை முதலமைச்சராக இருந்தாலும், முன்பு நடத்திய அதே நிகழ்ச்சி நிரலையே என்னால் இயக்க முடியும். நான் எடுக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எப்போதும் ஒத்துழைக்கிறார். எனது அதிகாரங்கள் துணை முதலமைச்சருக்கானதுதான் என்றாலும், தற்போது நான் சுதந்திரமாக செயல்பட முடியும்” என்றார்.
2019 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சரத் பவாருடனான அரசியல் பேச்சுவார்த்தைகளை தேவேந்திர ஃபட்னாவிஸ் பகிர்ந்து கொண்டார். அப்போது ”சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். சரத் பவார் பின்னர் அஜித் பவாரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். அஜித் பவாருடன் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது, அதற்கு சரத் பவார் ஒப்புதல் அளித்தார். ஆனால், வழக்கம் போல், கடைசி நேரத்தில் சரத் பவார் பின்வாங்கினார். என்னை ப்ரோமோட் செய்து எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு இப்போது சரியான நேரத்தில் பின்வாங்குவது அஜித் பவாருக்கு பிடிக்கவில்லை. பாஜகவுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது என்று சரத் பவாரிடம் கூறிவிட்டு அஜித் பவார் எங்களுடன் வந்தார். மற்ற என்சிபி எம்எல்ஏக்களும் எங்களுடன் சேர விரும்பினர். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக கூட்டணியில் நீடிக்க முடியவில்லை. அதனால்தான் முதலமைச்சர் பதவியில் இருந்து எதிர்க்கட்சித் தலைவராக ஆனேன்” எனக் கூறினார்.