Vijay VS Udhay: அஜித்திற்கு உதயநிதி திடீர் வாழ்த்து! விஜய்க்கு எதிரான வியூகம் கைகொடுக்குமா?
விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை முடித்துள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த 27ம் தேதி நடத்தினார். அந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகளை அறிவித்த நடிகர் விஜய் தங்களது கருத்தியல் எதிரி பா.ஜ.க. என்றும், அரசியல் எதிரி தி.மு.க. என்றும் மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
விஜய் VS உதய்:
மேலும், திராவிட மாடல் குடும்ப ஆட்சி என்றும் தி.மு.க.வை விமர்சித்து பேசினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு ஆதரவும், கண்டனமும் குவிந்து வருகிறது. நடிகர் விஜய் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் உதய் – விஜய் என்ற சூழல் உருவாகுமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் விஜய்க்கு நிகரான ரசிகர் கூட்டத்தையும், புகழையும் கொண்டுள்ள நடிகர் அஜித். பொதுவெளியில் பெரியளவில் கலந்து கொள்ளாத அஜித்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அஜித் துபாய் கார் ரேஸிற்காக தனி அணியை உருவாக்கியதுடன் அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
அஜித்திற்கு வாழ்த்து:
இந்த நிலையில், நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அந்த வாழ்த்தில் அஜித்தின் கார் ரேஸிங் அணியின் ஹெல்மெட்டில் தமிழக அரசின் விளையாட்டுத்துறையின் லோகோவை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்ததுடன், விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட இணைந்து செயல்படுவோம் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.
விஜய்க்கு எதிரான வியூகம் என்ன?
உதயநிதியின் வாழ்த்து இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. நடிகர் விஜய் தி.மு.க.வை எதிர்த்துதான் தன்னுடைய அரசியல் பயணம் என்று கூறியுள்ள நிலையில், ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு என்று தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் வலை வீசியுள்ள நிலையில் தி.மு.க. விஜய்க்கு எதிரான வியூகத்தை தீவிரமாக வகுக்கத் தொடங்கியுள்ளது.
தே.மு.தி.க.வை விஜயகாந்த் தொடங்கியபோது பெரும் சவாலை தி.மு.க. எதிர்கொண்டதுபோல விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் தி.மு.க. எதிர்கொள்ள நேரிட வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
விஜய்யின் போட்டியாளர் அஜித்:
இதன்காரணமாக, இளைஞர் பட்டாளங்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் பலரும் விஜய் ரசிகர்களாக இருப்பதும் தி.மு.க.விற்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால், விஜய்க்கு போட்டி நடிகராக கருதப்படுபவராகவும், அவருக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்டவருமான அஜித்தின் ரசிகர்களை கவர்வதற்கான வியூகமாகவே உதயநிதி ஸ்டாலினின் இந்த வாழ்த்து கருதப்படுகிறது. நடிகர் அஜித்திற்கு உதயநிதி மட்டுமின்றி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்காக தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் கருணாநிதி முன்பே அஜித்குமார் கூறிய கருத்துகள் அப்போது தமிழ்நாட்டையே அதிர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும். நடிகர் அஜித் ஜெயலலிதாவிற்கு மிகவும் விருப்பமானவராக திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைகொடுக்குமா வியூகம்?
தமிழிசை சவுந்தர்ராஜன் ஒரு முறை அஜித்குமார் ரசிகர்கள் பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என்று கூறியபோது, அதற்கு அடுத்த நாளே அரசியலில் ஈடுபட தனக்கு ஆர்வம் இல்லை என்று அஜித் வெளிப்படையாக கூறியதுடன், தன்னுடைய ரசிகர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தான் கூற இயலாது என்றும் அவர் அறிக்கை வெளியிட்டதும் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாக அப்போது பேசப்பட்டது.
இந்த சூழலில், விஜய்க்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள வியூகம் கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.