"சபரீசன் ஏன் செந்தில் பாலாஜியை மட்டும் சென்று பார்க்கவேண்டும்" - முன்னாள் அமைச்சர் செம்மலை கேள்வி
செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்று கூறியதுடன், திமுக ஆட்சிக்கு வந்தால் அவரை சிறைக்கு அனுப்புவேன் என்று ஸ்டாலின் கூறினார்.
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி இன்றையதினம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சேலம் புறநகர், சேலம் மாநகர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2000 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவிநீக்கம் செய்யகோரியும், திமுக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியதோடு தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வு, மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். அப்போது அவர், ”பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்பதுபோல்தான் திமுக ஆட்சி உள்ளது என்றார். குற்றவாளி என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியை ஏன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்கியதுடன், முதலமைச்சருக்கும் செந்தில்பாலாஜிக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்று சந்தேகம் எழுப்பினார். செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்று கூறியதுடன், திமுக ஆட்சிக்கு வந்தால் அவரை சிறைக்கு அனுப்புவேன் என்று ஸ்டாலின் கூறினார். அது தற்போது நடந்துவிட்டது என்று குறிப்பிட்டார். மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பெரியசாமி ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது சென்று பார்காத சபரீசன் ஏன் செந்தில் பாலாஜியை மட்டும் சென்று பார்க்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியில் 70 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஒப்பந்தம் செந்தில் பாலாஜியின் நண்பருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைத்த ஊழல் பணம் கைமாறி இருப்பதுதான் காரணம் என்றார். தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு உதாரணம் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற அராஜகமே போதும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கள்ளச்சாராயம் குறித்து குற்றம் சாட்டிய போது கள்ளச்சாராயமே இல்லை என்று கூறினர். கள்ளச்சாராய சாவுக்கு பின்னர் கள்ளசாராயம் விற்ற 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அப்படி என்றால் திமுக ஆட்சியில் அதிகாரிகள் துணையுடன் கள்ளசாராயம் விற்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று செம்மலை தெரிவித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், மணி, ராஜமுத்து, சித்ரா, நல்லதம்பி, ஜெய்சங்கரன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.