Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: தேர்தலில் வெற்றியை கொடுக்காத டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மி இதை செய்யும் என, தோல்விக்குப் பின் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை பார்க்கலாம்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவி, பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலே புது டெல்லி தொகுதியை தோல்வியை தழுவியுள்ளார். ஆனாலும், டெல்லி மக்களுடன் இருப்போம் என, தோல்விக்குப் பிறகும் அவர் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வந்த 10 வருட ஆம் ஆத்மி ஆட்சி
தலைநகர் டெல்லியில், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியில் இருந்துவந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, அதிகாரப்பூர்வமாக பாஜக 40 இடங்களை கைப்பற்றி, 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பது உறுதியானது. இதையடுத்து, தோல்வியே அடைய மாட்டோம் என்று கூறி, கடந்த 10 வருடங்களாக தொடர்ந்துவந்த கெஜ்ரிவால் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
தோல்வி குறித்து கெஜ்ரிவால் கூறியது என்ன.?
இந்த தோல்வி குறித்து பேசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என கூறியுள்ளார். மேலும், மக்களின் முடிவை பணிவாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், பாஜக-வின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதோடு, பாஜகவிற்கு இந்த வெற்றியை கொடுத்துள்ள மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 10 வருடங்களாக எங்களை நம்பி, அவர்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில், கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஆம் ஆத்மி உழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதே மக்கள், தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டு அவர்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்திருப்பதாகவும், அவர்களின் சுக, துக்கங்களில் ஆம் ஆத்மி அவர்ளுடன் இணைந்தே பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு முக்கியமாக, தாங்கள் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், கஷ்டமான நேரத்தில் உடன் இருந்து மக்களுக்கு சேவை செய்யும் ஒரு வழியாகவே அரசியலை பார்ப்பதாகவும், அதை தங்கள் கட்சி தொடர்ந்து செய்யும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தேர்தலில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்த ஆம் ஆத்மி கட்சியினருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?




















