விஜய் மாநாட்டில் விஜயகாந்த் புகைப்படம்.. பிரேமலதா என்ன சொல்ல போறாரோ.. கடுப்பில் திமுக!
மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில் விஜயகாந்த் புகைப்படம் இடம்பிடித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

மதுரையில் நடைபெறும் தவெகவின் 2ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் 90 சதவீதம் முடிவடைந்திருக்கிறது. மாநாடு நடைபெறும் திடலில் பார்க்கிங் வசதிக்காக 450 ஏக்கர் என, ஒட்டுமொத்தமாக 700 ஏக்கர் நிலப்பரப்பு மாநாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 100 அடி உயர கொடிக் கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மாநாட்டின் இதயமாக, 500 பேர் அமரக்கூடிய, 214 மீட்டர் நீள பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில், விஜய் உட்பட கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அமர உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாநாட்டு கூட்டத்தில் நடந்த தவறுகளை சரி செய்யும் வகையில் தொண்டர்களுக்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பெண்களுக்கான பிங்க் ரூம் மருத்துவ உதவிகள் என அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் ராம்ப் வாக் மேடை 350 மீட்டர் நீளம் அமைக்கப்பட்டுள்ளது. தவெக கட்சியை தொடங்கிய பிறகு விஜய் இந்திய அளவில் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அதேபோன்று மதுரையில் நடைபெறும் மாநாடு தமிழக அரசியலில் மிகவும் ஸ்பெஷலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 1986இல் எம்ஜிஆர் தனது முதல் மாநாட்டை மதுரையில் நடத்தினார். அதேபோன்று நடிகர் விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேமுதிக கட்சியை தொடங்கி வைத்து மாநாடு நடத்திய இடமும் மதுரை தான். அவரை தொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி தனது முதல் மாநாட்டை மதுரையில் நடத்தினார். தற்போது தவெக தலைவர் விஜய் 2ஆவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவது திமுக, அதிமுக போன்ற கட்சிகளை புருவம் உயர வைத்திருக்கிறது.
குறிப்பாக தவெக மாநாட்டுக்காக தயாராகி வரும் தவெக தொண்டர்களை விட பொதுமக்களும் புது புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். மதுரை மக்களின் பாசத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லி தீர்த்துவிட முடியாது. அதேபோன்று விஜய் மீது வைத்துள்ள பேரன்பை வெளிப்படுத்த மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி பேனர் வைத்து வரவேற்க தயாராகி விட்டார்கள். முன்னதாக அஜித் ரசிகர்கள் வைத்த பேனர் ஒன்று கவனத்தை பெற்றது. அதேபோன்று விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சிலர் விஜய்யை வரவேற்று பேனர் வைத்துள்ளனர்.
அந்த பேனரில் விஜய் தோள் மீது விஜயகாந்த் கை போட்டிருப்பது போன்று இடம்பிடித்திருக்கிறது. இதில், வைரத்தை இழந்துவிட்டோம் இந்த தங்கத்தை விட்டுவிடமாட்டோம் என்ற வாசகத்துடன் பேனர் வைத்துள்ளனர். தற்போது இந்த பேனர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேனர் மூலம் விஜய்க்கு புதிய சிக்கல் வெடித்திருக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தங்களது சுயலாபத்திற்காக விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது என எச்சரித்திருந்தார். அதனை மீறியும் இந்த பேனர் வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






















